

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரர்கள் 12 பேரை கொன்றுவிட்டு அவர் களின் ஆயுதங்களை நக்சல் தீவிரவாதிகள் கொள்ளை யடித்துச் சென்றனர். உயிரிழந்த 12 வீரர்களில் ஒருவரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் உடல் சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆவடி சிஆர்பிஎப் கமாண்டர் மனோகரன், செல்வகுமார் ஆகியோர் சங்கரின் உடலை பெற்றுக்கொண்டனர். அங்கிருந்து சிஆர்பிஎப் வாகனம் மூலம் அவரது சொந்த ஊருக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் சக்கரவர்த்தி தலைமையில் 12 பேர் சங்கரின் உடலை தேசியக்கொடி போர்த்தி சுமந்து சென்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
அவரது உடலுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சியர் சுப்பிரமணியன், சிஆர்பிஎப் டிஐஜி மிஸ்ரா, எஸ்பி மனோகரன், விழுப்புரம் எஸ்பி நரேந்திரன் நாயர், ஏடிஎஸ்பிக்கள் ஆதிகேசவன், நாராயணன், குமார், ஆறுமுகம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையான ரூ.20 லட்சத்துக்கான காசோலை சங்கரின் மனைவி எழிலரசியிடம் வழங்கப்பட்டது.
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவான முன்னாள் அமைச் சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட் டது.
இரவு 8 மணிக்கு 21 குண்டுகள் முழங்க அதே ஊரில் உள்ள இடுகாட்டில் சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சல் பயங்கரவாதிகள் கடந்த 11-ம் தேதி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் பணியில் இருந்த விழுப்புரம் மாவட்டம் கழுமரத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை துணை ராணுவ வீரர் கே.சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்தேன். சங்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சங்கரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.