

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாசிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ள வாசகங்களே கோரிக்கை போல் இல்லாமல் உத்தரவுபோல் இருந்ததாக திமுகவின் முதன்மை பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது நிகழ்ந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
''அதிமுக எம்எல்ஏக்களை சிந்திக்க விடாமல் கூவத்தூரில் அடைத்து வைத்திருந்து நம்பிக்கை வாக்கெடுக்கு கோரும் நாளன்று சட்டப்பேரவைக்கு அழைத்து வந்தனர். திமுக உறுப்பினர்களை சட்டப்பேரவை காவலர்கள் மட்டுமின்றி மற்ற காவலர்களையும் பயன்படுத்தி சபாநாயகர் வெளியேற்றினார். அதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிந்தது.
பிரதான எதிர்கட்சி இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்களை சிறை வைத்து ஓட்டு வாங்கி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்கியதற்கு சமமானது.
அந்த நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானதத்தின் வாசகங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் நம்பிக்கை வாக்கு கோருவதுபோல் இல்லாமல் உத்தரவிடுவதுபோல் இருந்தன. அந்த வாசகங்களே தவறானது'' என்று துரைமுருகன் கூறினார்.