என்எல்சியில் தொழிலாளி சுட்டுக்கொலை: மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது; 24 மணிநேர வேலைநிறுத்தம்
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி மூளை சிதறி பலியானார். இந்த வீரர் கைது செய்யப்பட்டார். கலவரத்தில் ஈடுபட்டதாக 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி மந்தாரக்குப்பம் அஜீஸ்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). என்எல்சி சுரங்கம்1-ல் ஒப்பந்தத் தொழிலாளியாக 2012-ம் ஆண்டு வரை பணியாற்றினார். திங்கள்கிழமை 2-ம் சுரங்கத்தில் பணிபுரியும் நண்பரை பார்க்க வந்தார். நுழைவாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் நோமன், அடையாள அட்டை கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கு ராஜ்குமார் முன்னர் பணிபுரிந்த அடையாள அட்டையைக் காட்டியதாகவும் அதை ஏற்க சிஐஎஸ்எப் வீரர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த நோமன் ராஜ்குமாரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து 3 முறை சுட்டார். இதில் அவர் மூளை சிதறி அந்த இடத்திலேயே இறந்தார்.
தொழிலாளர்கள் மீது தாக்குதல்
இதையறிந்த சக தொழிலாளர்களும் ஊர்மக்களும் சிஐஎஸ்எப் வீரர்கள் மீது கல்வீசினர். அவர்களும் பதில் தாக்குதல் நடத்தவே அந்த இடமே போர்க்களமானது.
வீரர்களின் தாக்குதலில் தொமுச தலைவர் திருமாவளவன், துணைத் தலைவர் பரமசிவம் உள்ளிட்ட 16 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பரமசிவம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து சிஐஎஸ்எப் படையினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
போலீஸார் மீது கல்வீச்சு
தகவலறிந்து கடலூர் கோட்டாட்சியர் ஷர்மிளா, எஸ்பி ராதிகா வந்தனர். ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றபோது தொழி லாளர்களும் ஊர்மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். திடீரென போலீஸார் மீது கல்வீசினர். இதனால் மீண்டும் கலவரம் மூண்டது. போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர்.
இதில் பண்ருட்டி டிஎஸ்பி கிருஷ்ணசாமி, விருத்தாசலம் டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட 18 போலீஸாருக்கு மண்டை உடைந்தது. நிலைமை மோசமாகவே போலீஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மாலை 6 மணிக்கு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி பதற்றமாக காணப்படுகிறது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த ராஜ்குமாருக்கு மனைவி அமலா லூசியாராணி, இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
சிஐஎஸ்எப் வீரர் கைது
ராஜ்குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் சிஐஎஸ்எப் வீரர் மீது மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை இரவில் கைது செய்தனர். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கலவரத்தில் ஈடுபட்டதாக தொழிலா ளர்கள் மற்றும் ஊர் மக்கள் 44 பேரை மந்தாரக்குப்பம் போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறிய என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், சிஐஎஸ்எப் வீரரின் செயல் தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காயமடைந்த வர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தலைவர்கள் கண்டனம்
துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ரூ.20 லட்சம் வரை நிவாரணமும், ராஜ்குமாரின் மனைவிக்கு வேலையும் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
வேலை நிறுத்தம்
இதனிடையே துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை 24 மணிநேர வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
