

காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகாவுடன் தமிழகம் தகராறு செய்துகொண்டு இருப்பதற்கு பதிலாக, கடல் நீரில் உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கோவைக்கு நேற்று வந்த அவர், காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, “தமிழக மக்களுக்கு காவிரி தண்ணீர்தான் வேண்டுமா அல்லது தண்ணீர் வேண்டுமா? இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கடல் தண்ணீரில் உள்ள உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவுடன் தகராறு செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக, தமிழகம் கடல் நீரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் உள்ள உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “ஏர்செல் மேக் சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு செல்வார். அதற்கு முன்னதாக அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும், சாரதா சிட்பன்ட் மோசடி வழக்கில் நளினி சிதம்பரமும் சிறைக்குச் செல்வார்கள். ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் இருவரும் சிறைக்குச் செல்வார்கள்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஒரு வழக்கறிஞர். நான் ஒரு பொருளாதார நிபுணர் என்ற முறையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என கூறியதை, அவரைவிட சிறப் பாக செயல்பட்டு இருக்க முடியும் என ஊடகங்கள் திரித்து வெளி யிட்டுவிட்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யும். அதுபற்றி எனக்கு தெரியாது” என்றார்.