

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன் ரவி கொலை வழக்கில் எந்தவித குற்றமும் செய்யாத அதிமுக ஊராட்சி தலைவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகனான ரவி என்பவர் திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு பகுதியில் கடந்த 14-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த செவ்வாய்ப்பேட்டை ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வெங்கடேசன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளிப்பதற்காக செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த சிலர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். எனினும், போலீஸார், வெங்கடேசனின் மகன் உள்ளிட்ட சிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.
வெங்கடேசனின் மனைவி உள்ளிட்டோர் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை வெங்கடேசன் தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் அவரை மிரட்டி கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் உண்மை குற்றவாளி யார் என்பது தெரியவரும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.