Published : 22 Jan 2015 10:50 AM
Last Updated : 22 Jan 2015 10:50 AM

தொலைபேசி இணைப்புகள் முறைகேடு வழக்கு: ‘என்னை குற்றவாளியாக்க சிபிஐ தீவிர முயற்சி’ - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

‘என்னை குற்றவாளியாக்க சிபிஐ தீவிர முயற்சி மேற்கொள்கிறது’ என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப் புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் கவுதமன், சன் டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன், ரவி ஆகியோரை சிபிஐ போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் தயாநிதி மாறன், நேற்று காலை சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நான் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். இவ்வழக்கில் எனக்கு உதவியாளராக இருந்த கவுதமன், சன் டி.வி.யைச் சேர்ந்த கண்ணன் மற்றும் ரவியிடம் கடந்த 8 ஆண்டுகளில் 10 முறைக்குமேல் விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் அவர்களை கட்டாயப்படுத்தியும், அடித்து துன்புறுத்தியும் சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளனர்.

எனக்கும் சன் டி.வி.க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறேன். எனது வீட்டில் 300 தொலைபேசி இணைப்புகள் இல்லவே இல்லை. ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டும்தான் இருக்கிறது.

கைது நடவடிக்கையால் பாதிக்கப் பட்ட மூவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுத உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவி ஒருவரை திருப்திப்படுத்தவே, சிபிஐ இப்படி செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. என்னை குற்றவாளியாக்கியே தீரவேண்டும் என்று சிபிஐ தீவிர முயற்சி மேற்கொள்கிறது.

இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவி என்று யாரை கூறுகிறீர்கள்?

பாஜக தலைவர்களுக்கு நெருக்கமாகவுள்ள அவர், இதன்மூலம் தன்னை ஒரு அறிவு ஜீவி என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார். இதற்கு சிபிஐ ஒத்துழைக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. திராவிடக் கட்சி வளருவது அவர்களுக்குப் பிடிக்காது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். இது சிவில் வழக்கு. ஆனால் கிரிமினல் வழக்காக கையாளுகிறார்கள்.

உங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பகம் இருந்ததா?

எனது வீட்டில் ஒரே ஒரு இணைப்பு மட்டும்தான் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அதே எண்ணைத்தான் பயன்படுத்தி வருகிறேன். தவறாக பயன்படுத்தியிருந்தால், அது மின்னணு முறையில் தெரிய வந்திருக்குமே. எனது இணைப்பில் அதிக கட்டணம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை திருப்பிச் செலுத்துவதாக கூறியிருந்தேன். நான் பயன்படுத்திய தொலைபேசி சேவைகள் அனைத்தும் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டவைதான்.

இந்த வழக்கு ஐ.மு. கூட்டணி ஆட்சியில்தானே போடப்பட்டது?

அப்போதும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அறிவு ஜீவி இருந்தார். அவர் திமுகவை பழிவாங்குவதிலேயே குறியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு அறிவு ஜீவி வந்துள்ளார்.

இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.