தமிழர்கள் வெளியேற கேரளா ஆணை: கருணாநிதி கண்டனம்

தமிழர்கள் வெளியேற கேரளா ஆணை: கருணாநிதி கண்டனம்
Updated on
1 min read

கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் வெளியேற வேண்டும் என்று கேரள அரசு ஆணையிட்டிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: " இது பற்றி பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் விரிவானதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, மற்றவர்கள், தமிழர்கள் என்றாலே "இளித்த வாயர்கள்" என்று கருதுகிறார்கள் போலும்!

இலங்கையிலிருந்துதான் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடருகிறது என்றால், ஒரே இந்தியாவிலுள்ள கேரளத்திலும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை என்பது அதிர்ச்சியைத்தான் தருகிறது.

கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று கேரள அரசு ஆணையிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், அது "புலி வாலைப் பிடித்த" கதைபோல ஆகிவிடும்.

இப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமே இல்லை. ஏன், தமிழ்நாட்டில் சென்னை மாநகரிலேயே கேரளத்தவர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்கள்? அவர்களையெல் லாம் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டு மென்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டால் என்ன வாகும்?

இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலே உள்ளவர்களும், அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர் களை வெளியேற்ற முன்வந்தால், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பதெல்லாம் கேள்விக் குறியாகிவிடாதா?

அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம் செய்து வருகின்ற நிலங்கள், பழங்குடி இன மக்களுக்குச் சொந்தமானவை என்றும், பழங்குடியினரின் நிலங்கள், அவர்களுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும் கேரள அரசு கூறுகிறது. பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கவில்லை.

கேரள அரசில் பணியாற்றும் சில அதிகாரிகள் தமிழர் களிடமிருந்து அந்த நிலங்களைப் பெற்று, பழங்குடியின மக்களிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்ற பெயரால், அவற்றை ஒருசில பெரிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியில்தான் சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

அதே கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்குச் சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் நிலங்களை யெல்லாம் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் பறித்துக் கொண்டிருக்கின்றன. அந்த நிலங் களைத் திரும்பப் பெற்று பழங்குடி இன மக்களுக்கு மீண்டும் வழங்க முயற்சி எடுக்காத கேரள அரசு, தமிழர்கள் வாழும் பகுதியிலே உள்ள நிலங்களை மட்டும் பறிக்க முயற்சிப்பது நியாயமான செயல் அல்ல.

எனவே தமிழக அரசு இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாகக் கவனித்து, கேரள அரசுடனும், மத்திய அரசுடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து அட்டப்பாடியில் காலம் காலமாக இருந்து வரும் தமிழர்களைக் காப்பாற்றிட முன்வரவேண்டும்." என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in