Last Updated : 11 Jul, 2016 04:28 PM

 

Published : 11 Jul 2016 04:28 PM
Last Updated : 11 Jul 2016 04:28 PM

சென்னை அரசினர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து 33 சிறுவர்கள் தப்பியோட்டம்

29 பேரை போலீஸ் சுற்றி வளைத்தது; 4 பேர் தற்கொலைக்கு முயற்சி

சென்னை புரசைவாக்கம் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 33 சிறுவர்களில் 29 பேரை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். 4 சிறுவர்கள் டியூப் லைட், பிளேடுகளால் கை, கழுத்தில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் (சிறுவர் சீர்திருத்தப் பள்ளி) செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்படுகின்றனர். 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஒரு தரப்பினரை முதல் தளத்திலும், மற்றொரு தரப்பினரை 2-வது தளத்திலும் தங்க வைத்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை உணவு சாப்பிடும்போது மீண்டும் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கையில் கிடைத்த டியூப் லைட், கற்கள், கட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், காப்பாளர்கள், கண்காணிப்பாளர் முயற்சி செய்தும் மோதலை தடுக்க முடியவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட 33 சிறுவர்கள் பின்பக்கமாக சென்று 8 அடி உயரம் உள்ள சுவர் மீது ஏறி குதித்து தப்பிச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த தலைமைச் செயலக காலனி போலீஸார் கூர்நோக்கு இல்லத் துக்கு வந்து விசாரணை நடத்தி னர். தப்பிச் சென்ற சிறுவர்களின் பட்டியலை தயார் செய்த போலீ ஸார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் புரசைவாக்கம், கெல்லீஸ் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 29 சிறுவர்களை சுற்றி வளைத்து பிடித்து கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மீதமுள்ள 4 சிறுவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கூர்நோக்கு இல்லம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.

4 சிறுவர்கள் தற்கொலை முயற்சி

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவர்களை பிடிக்க முயன்றபோது 4 சிறுவர்கள் உடைந்த டியூப் லைட், பிளேடுகளால் தங்களுடைய கை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தனர். போலீஸார் சிறுவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது சிறுவர்கள், "எங்களால் அங்கு இருக்க முடியவில்லை. எங்களை வெளியே விடுங்கள்" என்று போலீஸாரிடம் கதறினர். காயமடைந்த சிறுவர் கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் கூர்நோக்கு இல்லம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிறுவர்களின் பெற்றோர்

சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவத்தை கேள்விப்பட்ட அவர்களின் பெற்றோர் கூர்நோக்கு இல்லத்தில் குவிந்தனர். அங்கு வந்த கொளத்தூரைச் சேர்ந்த லட்சுமி கூறும்போது, "என் மகன் சண்டைப் போட்டதாக, இங்கு அடைத்தனர். மகனுக்கு சரியாக உணவு கொடுப்பதில்லை. மகனை பார்க்கவும் விடுவதில்லை. மகன் உள்ளே இருக்கிறானா? இல்லையா? என்று கூட அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர்" என்றார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயபவித்ரா கூறும்போது, "லைசன்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய என் மகனை பிடித்த போலீஸார் செல்போன் திருடியதாக வழக்குப் போட்டு கைது செய்து இங்கு அடைத்துள்ளனர். இங்கு அடிக்கடி சிறுவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. டியூப் லைட்களை உடைத்து கைகளை அறுத்துக்கொள்கின்றனர். இப்போது மகனை பார்க்கவும் உள்ளே விடவில்லை" என்றார்.

பாதுகாப்பு குறைபாடு

"இந்த கூர்நோக்கு இல்லத்தில் இருந்து மாதந்தோறும் சிறுவர்கள் தப்பிச் செல்வதும், அவர்களை போலீஸார் பிடிப்பதும், சிறுவர்க ளுக்குள் இடையே மோதல் ஏற்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதற்கு பாதுகாப்பு குறைபாடே முக்கிய காரணம். குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே இங்கு அடைக்கப்படுகின்றனர். ஆனால் இங்குள்ள சூழல் சிறுவர்களை மேலும் குற்றவாளியாக மாற்றுகிறது" என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் கட்ட விசாரணை

கூர்நோக்கு இல்லத்தில் மாஜிஸ் திரேட் லட்சுமி, போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து கண்காணிப்பாளர் மற்றும் வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை யில், இந்த கூர்நோக்கு இல்லத்தில் சிறிய அளவில் மனநலம் பாதிக்கப் பட்ட சிறுவர்களையும், பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர் களையும் தனித்தனியாக வைக் காமல், ஒன்றாக வைத்ததே மோதலுக்கு காரணமாக இருக் கலாம் என்று தெரிய வந்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட தால் கூர்நோக்கு இல்லத்துக்கு வந்து, பின்னர் திருந்தி வாழ்பவர்களை, போலீஸார் வேறு வழக்குகளில் குற்றவாளிகள் சிக்காத நிலையில் மீண்டும் கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x