கோடை வெயிலால் நோய் தொற்று அபாயம்: குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் - குழந்தை நல மருத்துவர் ஆலோசனை

கோடை வெயிலால் நோய் தொற்று அபாயம்: குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் - குழந்தை நல மருத்துவர் ஆலோசனை
Updated on
2 min read

வேலூரில் நேற்றைய வெயில் 106 டிகிரி

கோடை வெயிலிலிருந்து பாதுகாக்க எளிய வழிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையினர் வழங்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளைக் காட்டி லும் நடப்பாண்டில் கோடை வெயில் கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்ப தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் அளவு 100 டிகிரிக்கு அதிகமாக பதிவாகி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் கடைசி மற்றும் மே மாதங் களில் பதிவாகும் வெயில் அளவு, மார்ச் இறுதி வாரத்திலேயே பதிவாகியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் உடல் சூடு அதிகரித்து பல்வேறு நோய் தாக்குதலுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதிலிருந்து பாதுகாக்க, கோடைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் தேரணி ராஜன், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால், குழந்தைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிக வெப்பம் பதிவாவதால் குழந்தைகள் நீர் தாகத்துக்கு ஆளாகிறார்கள். தரமற்ற அல்லது சுகாதாரமற்ற குடிநீரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

சுகாதாரமற்ற குடிநீரை குழந்தைகள் பருகுவதால் டைஃபாய்டு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, கணையம் வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மஞ்சள் காமாலை, மண்ணீரல் வீக்கம், நீரிழந்த தன்மை, வாந்தி, உடல் சோர்வு, உப்புச் சத்துக் குறைவு ஏற்படுகிறது.

இது மட்டுமின்றி கோடை வெயிலால் அம்மை நோய் அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளது. வெயில் காலங்களில் அம்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து பரவும் காய்ச்சலால் கொப்பளங்கள் ஏற்படும். தவிர, வேர்க்குரு போன்ற சரும நோய்களும் ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு தோலில் கட்டிகள் ஏற்படும். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் சோர்வு, தலைவலி, நீரிழந்த தன்மை ஆகியவை ஏற்படும்.

இதுபோன்ற நோய்களைத் தவிர்க்க பச்சிளங் குழந்தை முதல் பெரியவர்கள் வரை, சுத்தமான குடிநீரைப் பருகவேண்டும். இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு குடிக்கலாம். டைஃபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க, 1 வயது குழந்தை முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

உடல் சூட்டைத் தணிக்க குழந்தைகளை தினமும் இரு வேளை குளிப்பாட்டலாம். வெயில் நேரங்களில் காலை 11 மணி முதல் 3 வரை குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க லாம். ஆரோக்கியமான உணவு வகைகள், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பழ வகைகளை உட்கொண்டால், வெயில் தாக்கத் திலிருந்தும், கோடையால் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்தும் குழந்தை களை சுலபமாக பாதுகாக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in