கன்னியாகுமரி படகு சவாரியில் குளறுபடி: திருவள்ளுவர் சிலைக்கு செல்லாமலே கட்டணம் வசூல்

கன்னியாகுமரி படகு சவாரியில் குளறுபடி: திருவள்ளுவர் சிலைக்கு செல்லாமலே கட்டணம் வசூல்
Updated on
1 min read

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், படகு சவாரியின் போது அங்கு செல்வதற்கான கூடுதல் கட்டணம் தொடர்ந்து வசூல் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய 3 படகுகள் சவாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு சென்று வர, டிக்கெட் ஒன்றுக்கு ரூ. 34 சாதாரண கட்டணமும், கூட்ட நெரிசல் அதிகமான நேரத்தில் ரூ. 169 வி.ஐ.பி. வரிசை கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.

இதில், ஒரு டிக்கெட்டில் திருவள்ளுவர் சிலைக்கான கட்டணமாக ரூ. 5 அடங்கும். இத்தொகையை ஒவ்வொரு மாதமும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர், திருவள்ளுவர் சிலையை பராமரிக்கும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் வழங்கி வருகின்றனர்.

தற்போது, திருவள்ளுவர் சிலையை 1 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் ரசாயன கலவைபூசி பராமரிப்பதற்கான பணி நடந்து வருகிறது.

கடந்த 17-ம் தேதி தொடங்கிய இப்பணி வருகிற அக்டோபர் மாதம் வரை நடை பெறுகிறது. அங்கு செல்வதற்கான படகு போக்கு வரத்து 6 மாதம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால், விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு சவாரி நடந்து வருகிறது. திருவள்ளுவர் பாறைக்கு படகில் செல்லமுடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகளிடம், அங்கு செல்வதற்கான 5 ரூபாய் கட்டணம் தொடர்ந்து கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. விவரம் அறியாத வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. அதே நேரம் இந்த கட்டண விவரம் குறித்த விவரம் அறிந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் செல்வதற்குரிய கட்டணத்தை பெறவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரி விளக்கம்

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் வின்சிலிராய் கூறும்போது, ``படகு சவாரியில் 34 ரூபாய் கட்டணத்தில் 5 ரூபாய் திருவள்ளுவர் சிலைக்கும் அடங்கும். இது திருவள்ளுவர் சிலைக்கான பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பெறப்படுகிறது. இதை சுற்றுலா பயணிகள் பலரும் திருவள்ளுவர் சிலைக்கான சவாரி கட்டணம் என எண்ணுகின்றனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in