

உள்ளாட்சி அமைப்புகளை அழிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசு பஞ்சாயத்து அமைப்புகளை அழிக்க முயற்சிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும். பஞ்சாயத்துக்கு நேரடியாக நிதி வழங்குவதற்கு பதிலாக மாநில அரசுகள் மூலம் நிதி வழங்கும் முடிவை தான் மத்திய அரசு எடுத்துள்ளது.
பஞ்சாயத்துக்களுக்கான நிதி ரூ.3.48 லட்சத்திலிருந்து ரூ. 5.25 லட்சமாக உயர்த்தப்பட்டது இந்த ஆட்சியில் தான். ஊழலை ஒழிப்பதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை பிரதமர் மோடி குறைத்தார். இத்தகைய சீர்திருத்தத்தின் தொடர்ச்சியாகவே, பஞ்சாயத்து அமைப்புகளின் நிர்வாகம் தனி அமைச்சகத்திலிருந்து கிராமப்புற ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனைகள் தான் நடந்து வருகிறது. அதற்குள்ளாகவே மத்திய அரசை குறை சொல்வது ஏற்புடையது அல்ல.
பாஜக ஆட்சி வந்த பிறகு 60 வருடங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 292 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2020 ஆண்டு வரை இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு கிராமத்துக்கு ஆண்டுக்கு ரூ.17 லட்சம் கிடைக்கும். இந்த தொகை 2010 முதல் 2015 வரை ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிகம்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.