Published : 14 Jun 2016 08:09 AM
Last Updated : 14 Jun 2016 08:09 AM

சென்னையில் ஏற்படும் கடல் அரிப்புக்கு காரணம் என்ன?- கடற்கரை வள மையம் விளக்கம்

சென்னையில் ஏற்படும் கடல் அரிப்புக்கு, கோவளத்தில் ஏற்படுத்தப்பட்ட கடல் அரிப்பு தடுப்பான்களே காரணம் என்று கடற்கரை வள மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக சென்னையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் பட்டினப்பாக்கம், ஊரூர் குப்பம், திருவான்மியூர் குப்பம், கொட்டிவாக்கம் ஆகிய மீனவப் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு, அங்குள்ள வீடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. கட்டுமர மீனவர்கள் ஒரு வாரமாக கடலுக்குள் செல்லாததால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவளத்தில் ஏற்படுத்தப்பட்ட கடல் அரிப்பு தடுப்பான்களே, சென்னையில் கடல் அரிப்புக்கு காரணம் என்று கடற்கரை வள மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தைச் சேர்ந்தவரும், மீனவருமான சரவணன் கூறியதாவது:

கடலோரப் பகுதியில் ஓர் இடத்தில் கற்களை கொட்டியோ அல்லது வேறு வகையிலோ கடல் அரிப்பு தடுப்பான்களை ஏற்படுத்தினால், இயற்கான கடல் மணல் நகர்வு பாதிப்புக்கு உள்ளாகும். இதன் காரணமாக கடல் அரிப்பு தடுப்பான் ஏற்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து, அதன் வடக்கு பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக இருக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அமாவாசை மற்றும் பருவமழை காலங்களில் கடல் சீற்றம் ஏற்படும். ஆனால், அப்போதெல்லாம், இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதில்லை. கோவளம் பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுக்க, அப்பகுதியில் அண்மையில் கடல் அரிப்பு தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே, அதன் வடக்கு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கோவளத்தில் இருந்து வடக்கு கடலோரப் பகுதியில், படகுகளைக்கூட நிறுத்தி வைக்க இடம் இல்லாத அளவுக்கு நிலப்பரப்பு அரித்துச் செல்லப்பட்டுள்ளது. மீனவர்கள் பலர் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x