

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல்நீர் புகுந்ததால் 27 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் பல வீடுகள், இருந்த சுவடே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடல் சீற்றம் தொடர்வதால் கடலோரப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனால் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் கல் வீடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு, கட்டுமானங்கள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. கடல்நீர் புகுந்த வீடுகளில் மண லும், குப்பைகளும் குவிந்துள்ளன. அதை வீடுகளின் உரிமை யாளர்கள் அகற்றி வருகின்றனர். இப்பகுதி யில் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் உட்பட 27 வீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன.
சுனாமியோ என அச்சம்
வீடுகளை இழந்த இந்திரா, ஜானகி, சாந்தி, ஜெயா ஆகியோர் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்தே கடல் சீற்றமாகத்தான் இருக்கிறது. திடீரென கடல் அலை வீடுகளுக்குள் புகுந்தது. முதலில் சுனாமி என்று நினைத்து பயந்துவிட்டோம். வீடுகளில் வசித்தவர்கள் அனைவரும், உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றோம். எங்கள் வீடுகளை, அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டன. அங்கு நாங்கள் வசித்ததற்கான சுவடே இப்போது இல்லை. கடந்த 4 நாட்களாக உறவினர் வீட்டில்தான் இருக்கிறோம்.
கடந்த 2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்டபோதே, எங்களுக்கு குடியிருப்பு கட்டித் தருவதாக அரசு அறிவித்தது. இதுவரை கட்டித்தரவில்லை. இப்பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். அதையும் அமைக்கவில்லை. இதனால் இப் பகுதியில் அச்சத்துடனே வாழ்ந்து வந்தோம். இப்போது வீடுகளும் போய்விட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீனவர்கள் பாதிப்பு
மீனவர் எம்.ராஜேஷ் கூறும் போது, ‘‘கடல் சீற்றம் காரணமாக, கடலுக்குள் கட்டுமரங்களை செலுத்த முடியவில்லை. அத னால் 4 நாட்களாக கடலுக்குள் போகவில்லை. விசைப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர். கட்டுமர மீனவர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
வட்டாட்சியர் ஆய்வு
பாதிக்கப்பட்ட வீடுகளை, மயிலாப்பூர் வட்டாட்சியர் அ.பரிமளா தேவி நேற்றும் ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட 27 வீடுகளில் வசித்தவர்களின் விவரங்களை சேகரித்து, சென்னை ஆட்சியர் கு.கோவிந்தராஜுக்கு அனுப்பிவைத்தார். ஆட்சியரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘சம்பவம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறோம். பாதிக்கப் பட்டோருக்கான நிவாரணம் குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும்’’ என்றார்.
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதன் அறிகுறி தான் கடல் சீற்றம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள் ளது. தென்மேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுகிறது. மேலும் தென் அரபிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இது மேலும் சிலநாட்கள் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.