4 முறை வருகை பதிவு, சலுகைகள் மறுப்பு - சென்னை பெண் துப்புரவு ஊழியர்கள் வேதனை

4 முறை வருகை பதிவு, சலுகைகள் மறுப்பு - சென்னை பெண் துப்புரவு ஊழியர்கள் வேதனை
Updated on
2 min read

மாநகராட்சியில் துப்புரவு பணிபுரியும் பெண்கள் எந்தச் சலுகையும், பணிப் பாதுகாப்பும் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான துப்புரவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள். இவர்கள் தினமும் நான்கு முறை, அதாவது காலை 6 மணி, 10.30, மதியம் 2.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். (ஒரு சில வார்டுகளில் மட்டும் இரண்டு முறை கையெழுத்திடுவது அமலில் உள்ளது).

தற்போது மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் இருந்து வந்து பணிபுரிபவர்கள், ஒரு நிமிடம் தாமதமாக வந்தால்கூட வருகை பதிவு செய்யப்படுவதில்லை. பெண்கள், அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குழந்தைகளுக்கும் கணவருக்கும் சமைத்து வைத்துவிட்டு வர வேண்டும். 6 மணிக்கு வரவேண்டியவர்கள் 6.01க்கு வந்தால்கூட அவர்களின் வருகை பதிவு செய்யப்படுவதில்லை.

இதுகுறித்து புதுப்பேட்டையில் பணிபுரியும் துப்புரவு பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், “கண்ணகி நகர், துரைப்பாக்கம் போன்ற இடங்களில் இருந்துகூட பெண்கள் பணிக்கு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வருவதில்லை. எனவே, பத்து பதினைந்து நிமிடங்கள் சலுகை அளித்தால் வசதியாக இருக்கும். மேலும் இரண்டு முறை மட்டும் வருகை பதிவு இருந்தால் சீக்கிரம் வீடு திரும்ப முடியும்” என்றார்.

பணி நிரந்தரம் இல்லை

நிரந்தரப் பணியாளர்களை விட என்.எம்.ஆர். எனப்படும் தினக்கூலி தொகுப்பூதிய ஊழியர்களின் நிலை இன்னும் மோசமானது. சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப் பட்ட ஏழு மண்டலங்கள் முன்பு ஊராட்சி, நகராட்சிகளாக இருந்தன. அந்தக் காலத்தில் இருந்து பணிபுரிந்து வரும் இவர்கள், மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் நிரந்தரம் செய்யப்படவில்லை.

பல பெண்கள், கணவன் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இந்தப் பணிக்கு வந்தவர்கள். அவர்கள் தனியாக குடும்பத்தை கவனித்துக் கொண்டு பணிக்கு வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஒரு பெண் ஊழியர் கூறும்போது, ‘‘என் கணவர் செப்டிக் டேங்கில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி இறந்துவிட்டார். ஒன்பது மாத பெண் குழந்தையையும் ஒன்றரை வயது ஆண் குழந்தையையும் வைத்துக் கொண்டு வேறு வழியில்லாமல் இந்த வேலைக்கு வந்தேன். 18 ஆண்டுகளாகியும் நிரந்தரம் ஆகவில்லை. எங்களுக்கு துணி மாற்றிக் கொள்ளக்கூட ஓய்வறை கிடையாது. அதனால், பணி முடிந்து நாற்றமடிக்கும் உடையுடன் பஸ்களில் செல்ல வேண்டும். வழக்கமாக துப்புரவுப் பணியாளர்களுக்குத் தர வேண்டிய தேங்காய் எண்ணெய், ஷாம்பு, கையுறை போன்றவைகூட எங்களுக்கு தரப்படவில்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

விடுமுறை இல்லாத வேலை

துப்புரவுப் பணியாளர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, முக்கிய வேலை என்றாலோகூட லீவு போட்டால் அன்றைக்கு சம்பளம் கிடைக்காது. நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் வார விடுப்பு உண்டு. அதைத் தவிர எந்தப் பண்டிகைக்கும் விடுப்பு கிடையாது. ‘‘தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போதுகூட வேலை பார்த்தால்தான் சம்பளம். குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஊழியர்.

துப்புரவுப் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘என்.எம்.ஆர். ஊழியர்களுக்கு பணி நிரந்தரமானால்தான் விடுப்பு கிடைக்கும். அது அரசின் கையில்தான் இருக்கிறது. சில இடங்களில் ஓய்வறைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இன்னும் பல இடங்களில் கட்ட வேண்டியுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in