

தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நடப்பு ஆண்டுக்குள் நவீன ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இது தொடர்பாக பட்ஜெட்டில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 34,686 நியாய விலைக் கடைகளின் மூலம் 1.91 கோடி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு இலவச அரிசி வழங்கப் படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளையும், குடும்ப அட்டை தகவல் தொகுப்பினை ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைக்கவும் ரூ.318.40 கோடி செலவில் கணினிமயமாக் கும் பணிகள் நடந்து வருகின்றன. 2016-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப் படும். மேலும் புதிய அட்டை வழங்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இணையம் மூலம் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.
நுகர்வோரையும் விவசாயிக ளையும் இணைக்கும் வண்ணம் பண்ணை பசுமை நுகர்வோர் மையங்கள் உருவாக்கப்பட்டன. சந்தை அளவில் விலை கட்டுப் பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விலைக்கட்டுப்பாட்டு நிதியம் சிறப்பாகவும், செம்மையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நவீன கணினி பட்டா மாற்ற முறை
தமிழகத்தில் குறிப்பிட்ட வட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த நவீன கணினி பட்டா மாற்ற முறை, மாநிலம் முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
நிலப் பதிவுகள் நவீனமய மாக்கல் திட்டத்தின் மூலம், நில வரைபடங்கள் கணினி மயமாக்கப்படுகின்றன. பத்திரப் பதிவு மற்றும் நில அளவைத் துறை ஒருங்கிணைக்கப்பட்டு, பட்டா மாற்றங்கள், நிலப் பதிவுகளை புதுப்பித்தல் ஆகியவற்றை கணினி மூலம் மேற்கொள்ளவும், புதுப்பிக்கப்பட்ட பதிவுகளை இணையதளம் மூலம் பெற்று மக்கள் பயன்பெறவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட நவீன கணினி பட்டா மாற்ற முறை, மாநிலம் முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும்.
புதிய வட்டங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் 65 புதிய வட்டங்களும், 9 புதிய வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட் டுள்ளன. வருவாய்த்துறை நிர்வா கத்தை மேம்படுத்த தேவைக்கேற்ப புதிய வட்டங்களும், வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்படும்.
வருவாய்த் துறையின் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த 15 வட்டாட்சியர் அலுவலகங்கள், 5 கோட்டாட்சியர் அலுவலகங்கள், காஞ்சிபுரத்தில் நில அளவைத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றுக்கு ரூ.51.57 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
கூட்டு பட்டா வழங்கப்படும்
நிலம் குறைவாகவும் நிலமதிப்பு அதிகமாகவும் உள்ள இடங்களில், வீடில்லா குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தருவதற்காக கூட்டு பட்டா வழங்கும் ஒரு புதிய அணுகுமுறையை இந்த அரசு மேற்கொள்ளும். வீட்டின் கட்டிட வடிவமைப்பில் ஒரு நெகிழ்வுத் தன்மையை பின்பற்றி, ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இத்தகைய கூட்டுப் பட்டா நிலங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்.
2016-17 நிதியாண்டில் உழவர் பாதுகாப்பு திட்டத்துக்காக ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறைக்கு என மொத்தம் ரூ.5 ஆயிரத்து 686 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.