

மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய நபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அடகுகடை உரிமையாளரையும் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகர், முதல் மெயின் ரோடு, பரத்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரகுநாதன் (45). கடந்த மாதம் 30-ம் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 15 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுதொடர்பாக மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த 16-ம் தேதி அதிகாலையில் மடிப்பாக்கம் ராம்நகர் சந்திப்பில் தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்து வந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் குமார் என்கிற குள்ள குமார் (40) என்பதும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார்.
2013-ம் ஆண்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த தர்மிசந்த் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், நன்மங்கலம் வீர மணி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து குமாரை தர்மிசந்த் தங்க வைத்துள் ளார். தர்மிசந்த் தூண்டுதலில் பேரில் குமார் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடி கோவிலாம் பாக்கம் எஸ்.கொளத்தூர் பகுதி யில் அடகுக்கடை நடத்தி வரும் தர்மிசிந்திடம் விற்று பணமாக்கி யுள்ளார்.
இவ்வாறு மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கத்தில் 12 வீடுகளில் திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குமார், தர்மிசந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 68 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், 2 டிவி, 2 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.