

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக மாநில ஓட்டல்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடசுப்பு தெரிவித்தார்.
25-ம் தேதி தமிழக முழுவதும் அனைத்து உணவகங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "விவசாயிகள் தங்களது அடிப்படை உரிமைகளைக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பொது நோக்கத்தோடும் தலைநகர் டெல்லியில் போராடி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் பங்கேற்கும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவகங்கள் இயங்காது.
தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்" என்றார்.