

ஆந்திர சிறையில் வாடும் தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை விரைவில் மீட்டெடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற 32 கூலித் தொழிலாளர்களை ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, ஆந்திர காவல்துறையினர் செம்மரம் வெட்ட வந்ததாக அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தி, கைது செய்து, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இதனால் அவர்களது குடும்பங்கள் பெரும் கவலை அடைந்து, வறுமையில் வாடி, மீளாத்துயரத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திருப்பதி நீதிமன்றம் செம்மரம் வெட்டினால் ஜாமீன் கிடையாது என்று தீர்ப்பளித்தது. செம்மரம் வெட்டினாலோ, கடத்தினாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக் கிடையாது.
ஆனால் செம்மரம் வெட்ட வந்ததாக அப்பாவித் தமிழர்கள் மீது பொய் வழக்கு போட்டு கடந்த 33 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. இவர்களை விடுவிப்பதற்காக ஜாமீன் மனு போடப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜாமீன் கிடையாது என்று நேற்றைய தினம் ஆந்திர நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினால் 32 தமிழர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கின்ற கட்டாயச் சூழல் ஏற்படும்.
ஆந்திர நீதிமன்றம் மனிதாபிமானமற்ற முறையிலே, தவறு செய்யாத 32 தமிழர்களுக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கின்றது. இது மிகவும் வேதனைக்குரியது. தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கூலித் தொழிலுக்காகவும், கோயிலுக்கும் செல்கின்ற தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, வீண்பழி போட்டு சிறையில் அடைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கெனவே இது போன்ற பொய் வழக்கினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்த தமிழர்களை ஆந்திர நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆந்திர அரசு எந்தவித குற்றமும் புரியாத 32 தமிழர்களையும் விடுதலை செய்ய முன்வரவேண்டும். மேலும் தமிழக அரசு இது சம்பந்தமாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆந்திர சிறையில் வாடுகின்ற அப்பாவித் தமிழர்களை மீட்டுக் கொண்டுவரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு உதவிகரமாக இருக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.