

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததில் லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
திருப்பூரைச் சேர்ந்த சிவகுமார்(30), தினேஷ், ரமேஷ், அருண்குமார்(21) மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கவின்(20) ஆகியோர் தொழில் நிமித்தமாக கரூரூக்கு வந்துவிட்டு, நேற்று காரில் திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர். காரை ரமேஷ் ஓட்டினார்.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள நல்லிசெல்லிபாளையம் பகுதியில் கார் சென்றபோது, எதிரே கரூருக்கு மணல் ஏற்றுவதற்காக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில், காரில் தீப்பிடித்து லாரிக்கும் பரவியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சிவக்குமார், தினேஷ், ரமேஷ், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமணன்(41) ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
காயமடைந்த கவின், அருண்குமார் ஆகியோர் கரூர் தனியார் மருத்துவமனையிலும், லாரியில் லிப்ட் கேட்டு பயணம் செய்த சுந்தர்ராஜ் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தென்னிலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.