Published : 07 Jan 2014 12:00 AM
Last Updated : 07 Jan 2014 12:00 AM

தலைவர் யார் என்பதை முடிவு செய்ய பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது: அழகிரிக்கு ஸ்டாலின் பதிலடி

"கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்ற அழகிரியின் அரசியல் பிரகடனம் தி.மு.க.வில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஒட்டுமொத்த தென் மாவட்ட தி.மு.க.வே அழகிரியின் கண் அசைவில் கட்டுண்டு கிடந்தது ஒரு காலம். ஆனால் இப்போது, கடைசியாய் கைவசம் இருந்த மதுரை மாநகர் மாவட்டத்தையும் கைநழுவவிட்டு நிற்கிறார் அழகிரி. அதேசமயம், ஒரு காலத்தில் தென் மாவட்டங்களுக்கு வரத் தயங்கிய ஸ்டாலினுக்கு, இப்போது அழகிரியின் அடிமடியில் இருக்கும் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.வையே கலைக்கும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது.

“இதுதான் அழகிரிக்கும் ஸ்டாலி னுக்கும் உள்ள வித்தியாசம்’’என்று சொல்லும் தென் மாவட்ட தி.மு.க. சீனியர் கள், “எதையும் அதிரடியாய் செய்யக் கூடியவர் அழகிரி. அடிமேல் அடிவைத்து சாதிக்கக்கூடியவர் ஸ்டாலின்”.

அழகிரியின் வாதமும் ஸ்டாலினின் எதிர்வாதமும்

“தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் நான் பொம்மையாக உட்கார்ந் திருக்க முடியாது. தென் மண்டல தி.மு.க. என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அங்கே நான் சொல்பவர் கள்தான் மாவட்டச் செயலாளர்களாக இருக்க வேண்டும்’ என்பது தான் அழகிரி வைக்கும் டிமாண்ட். அப்படி எல்லாம் ஒட்டுமொத்த குத்தகை விடமுடியாது. அப்படிச் செய்தால், நாளைக்கு, ‘ஸ்டாலினை வரவேற்க எந்த மாவட்டச் செயலாளரும் போகாதே’ என்று இவரே உத்தரவு போடுவார்’ என்று எதிர்வாதம் செய்கிறார் ஸ்டாலின். இதில்தான் இப்போது மல்லுக்கட்டு நடந்து கொண்டிருக்கிறது’’ என்கிறார்கள்.

அழகிரிக்காக ஸ்டாலினுக்கு தூது அனுப்பிய கருணாநிதி

மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் முன்பு வரை, ‘அழகிரியோடு சமாதான மாகப் போகச்சொல்லுங்கள்’ என்று சீனியர்கள் சிலர் மூலம் ஸ்டாலினுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தாராம் கருணாநிதி. இப்போது, அவரும் எதுவும் பேசமுடியாமல் நிற்கிறார். அதேசமயம், அழகிரியின் சேனல் பேட்டி தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் இரண்டுவிதமான தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

செட்டிலானதை ஏன் கிளறுகிறார் அழகிரி?

ஸ்டாலின்தான் கட்சியின் அடுத்த தலைவர் என்பது ஏற்கெனவே செட்டி லான விஷயம். அதை தேவையில்லாமல் கிளறுகிறார் அழகிரி என்பது ஒருசாராரின் வாதம். ‘ஸ்டாலினை தலைவராக ஏற்று க்கொள்ள முடியாது என்று அழகிரி முரண்டு பிடிக்கிறார் என்றால் அவருக்குள் ஏதோ ஒரு மனக்குறை இருக்கிறது. அதை சரி செய்துவிட்டு ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டலாமே’ என்பது இன்னொரு சாராரின் வாதம். அழகிரியை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் உக்ரத் தால் வேறு ஏதேனும் அசம்பா விதங்கள் நடந்துவிடுமோ? என்று கவலைப் படுகிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

தலைவரை முடிவு செய்ய பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது

‘கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று சொல்லி இருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்டாலின், ‘இவர் யார் என்னைத் தலைவராக ஏற்க மாட்டேன் என்று சொல்வதற்கு? அதை முடிவு செய்ய பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது’ என்று கூலாகச் சொன்னாராம் ஸ்டாலின்.

அனேகமாக, தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து விளக்கம் கேட்டு அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்பதுதான் தி.மு.க. வட்டாரத்தின் சமீபத்திய தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x