

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோமாரி நோயால் இறக்கும் காப்பீடு செய்யப்படாத கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகள் வைத்த கோரிக்கைககள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு கால்நடைகள் இறக்கின்றன. இவற்றில் பல காப்பீடு செய்யப்படாதவை. இந்நோயால் இறக்கும் கால்நடைகள் காப்பீடு செய்யப் படாமல் இருந்தாலும், அவற்றுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கோமாரி நோயால் இறக்கும் கால்நடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
மாவட்டத்தில், அந்தந்த பகுதியில் செய்யப்படும் அறுவடை குறித்து முன்கூட்டியே அறிந்து, நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும். வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்தாத நிலையில் அவர்களுக்கு பயிர் கடன் மறுக்கப்படுகிறது. அவர்களுக்கும் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
மருத்துவமனைகளில் மருந்து இல்லை
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:
கோமாரி நோய் தாக்குதல் காரணமாக, மாவட்டம் முழுவதும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 20-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த நோய்க்கு திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. அங்கு கால்நடைகளை அழைத்துச் சென்றால், வெளியே தனியார் மருந்துக் கடைகளில் இருந்து மருந்துகளை வாங்கி வருமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த ஆட்சியர், “கோமாரி நோயைக் கட்டுப்படுத்த அரசு கால்நடை மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்படும்’’ என்றார்.
விஜயகாந்த் அறிக்கை
இதனிடையே, கோமாரி நோயால் உயிரிழக்கும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக கிராமங்களில் ஏழைய எளிய குடும்பங்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் பலரின் வாழ்வாதாரமாக கால்நடைகள் திகழ்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கோமாரி நோய்க்கு ஏராளமான கால்நடைகள் பலியாகி வருகின்றன. இது கால்நடைகளை வளர்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மழைக்காலங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகரிக்கும். அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு இருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது.
தமிழக அரசு கோமாரியால் இறக்கும் கால்நடைகளின் உரிமையாளருக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கோமாரி நோயை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், இந்நோய் பரவாமல் தடுத்திட தடுப்பூசிகளை போட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.