கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி: அனைவரையும் கவர்ந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான நாய்கள்

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி: அனைவரையும் கவர்ந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான நாய்கள்
Updated on
1 min read

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. சென்னை கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் கிளப் இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து நாய் வளர்ப்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் பங்கேற்றனர்.

கண்காட்சியில் உலகின் பல நாடுகளை சேர்ந்த உயர்ரக நாய்கள் பங்கேற்றன. இதில் இங்கிலிஷ் ஸ்பிரிங்கர் ஸ்பானியர், ஐரிஸ் ரெட் செட்டர், டால்மேஷன், பெகல், ஹக்கிட்டா, டக்ஸ் கூண்ட், சைபீரியன் ஹஸ்கி, சாலுக்கி, ஆஸ்திரேலியன் சில்கி டெரீரியர், திபெத்திய நாடுகளில் வளரும் மஸ்திப், டாபர்மேன், பாக்சர், ஜெர்மன் ஷெப்பர்டு என பல வகை நாய்கள் இடம்பெற்றன. இதில் குறிப்பாக கண்காட்சியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆப்கன் ஹண்ட் வகை நாய்களின் மதிப்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சம் வரை இருக்கும் என தெரிவித்தனர்.

கண்காட்சியில் 45 வகைகளில் மொத்தம் 270 நாய்கள் பங்கேற்றன. இரண்டு வெளிநாட்டு நடுவர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கொடைக்கானல் கெனல் கிளப் நிர்வாகி தனபாலகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாய்கள் கண்காட்சி பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாய்கள் வளர்ப்போருக்கும் இந்த கண்காட்சி ஊக்குவிப்பாக அமைந்தது. மேலும் கொடைக்கானலில் சீசன் இல்லாத ஜூலை மாதத்தில் கண்காட்சியை நடத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகளையும் கவரமுடியும், என்றார்.

கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் ஏழு வகையான 20-க்கும் மேற்பட்ட நாய்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். இதில் விலைமதிப்புமிக்க அவரது ஆப்கன் ஹண்ட் வகை நாயையும் கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தார். பெரும்பாலான பரிசுகளை அவரது நாய்கள் வென்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in