வேலூரில் காவல் ஆய்வாளரை தாக்கிய ஜி.ஜி.ரவியை அதிமுகவில் இருந்து நீக்கி ஜெ. அறிவிப்பு

வேலூரில் காவல் ஆய்வாளரை தாக்கிய ஜி.ஜி.ரவியை அதிமுகவில் இருந்து நீக்கி ஜெ. அறிவிப்பு
Updated on
1 min read

வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளரைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜி.ஜி.ரவியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் பாண்டி, பெருமுகை பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பிடிக்கச் சென்றார். அப்போது, அந்த லாரி அதிமுக பிரமுகர் நிர்வகித்து வரும் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் சென்றது.

லாரியை விரட்டிச் சென்ற ஆய்வாளர் பாண்டியை, கல்லூரி நிர்வாகியும் அதிமுக பிரமுகருமான ஜி.ஜி.ரவியும் அவரது ஆட்களும் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், ஆய்வாளர் பாண்டி மற்றும் அவரது ஜீப் ஓட்டுநர் ரமேஷ்குமார் ஆகியோரை மீட்டனர்.

தன்னை தாக்கியதுடன் மிரட்டியது குறித்து ஜி.ஜி.ரவி மீது ஆய்வாளர் பாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜி.ஜி.ரவி உள்ளிட்ட 15 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ஜி.ஜி.ரவி கைது செய்யப்பட்டார்.

ஜெயலலிதா அறிக்கை

இந்நிலையில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, ஜி.ஜி.ரவியை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட் பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி அதிமுகவுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.ஜி.ரவி (28-வது வட்டம், சத்துவாச்சாரி மேற்கு பகுதி, வேலூர் மாநகரட்சி) இன்று முதல், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in