

கரும்பு நிலுவைத் தொகையை தமிழக அரசே நேரிடையாக வழங்க வேண்டும் என்று குறைதீர்வுக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பிரசாந்த் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, “வறட்சியிலும் விவசாயி என்பவன் அழுதுக் கொண்டே உழுது கொண்டு இருப்பவன். விவசாயிகள் நொந்து போய் உள்ளோம். எங்களுக்கு வறட்சி நிவாரணத்தை விரைவாக வழங்க வேண்டும். ஏரி, குளம் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு விவசாயிகள் உறு துணையாக இருப்போம்.
வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்வதற்கு தண்ணீர் இல்லை. வாழவச்சனூர் அருகே தென்பெண்ணை யாற்றில் ரூ.9 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கு பொதுப்பணித் துறை யினர் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பி உள்ளனர். அதன்படி, வரும் நிதியாண்டில் நிதியை பெற்று தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண்மை மாணவர்கள் மட்டும் இல்லாமல், 20 ஆயிரம் விவசாயிகளும் பயன் பெறுவார்கள். தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளனர்.
எனவே, தமிழக அரசு நிதியை ஒதுக்கி நேரிடையாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மலை மாவட்டத்தில் கடுமை யான வறட்சி நிலவுவதால், கிணறு வெட்டுவதற்கு அரசு உதவி செய்யவேண்டும். தி.மலை அருணாச்சலா சர்க்கரை ஆலை தர வேண்டிய தொகையை பெற்றுத் தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏரி மற்றும் பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்ட வேண்டும். உயிரிழந்த மற்றும் தற்கொலை செய்து கொண்ட 3 விவசாய குடும்பங் களுக்கு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும்.
கலசப்பாக்கம் வட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்காமல் தொடர்ந்து அலைக் கழிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து தருவதில்லை. குப்பனத்தம் அணையை திறக்க வேண்டும். அதன்மூலம் 20 ஏரி களை நம்பியுள்ள விவசாயிகள் பயனடைவார்கள். சேத்துப்பட்டில் வட்ட அளவில் விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டம் நடத்த வேண்டும்” என்றனர்.
தி.மலை ஆட்சியர் பிரசாந்த் பேசும்போது, ‘‘ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயப் பணிக்கு மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சார் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மண் எடுத்துக் கொள்ளலாம். இதுவரை 10 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். விவசாயப் பணியை தவிர்த்து, செங்கல் சூளை உட்பட பிற பணிக்கு மண் எடுக்க அனுமதி இல்லை. விவசாயிகள் கூறியுள்ள கோரிக் கைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.