

சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை சுதந்திர நாட்டில்தான் நான் பயப்படுகிறேன் என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
விருதுநகர் வே.வ.வண்ணியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் நேற்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி செயலர் ஆர்.எஸ்.எஸ்.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மீனாராணி வரவேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை அறிவியல் நகர துணைத் தலைவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம் பேசியதாவது: மாணவப் பருவம் மிகச்சிறந்த பருவம். இப்பருவத்தில் மாணவர்களுக்கு தெளிவான இலக்கும் லட்சியமும் வேண்டும். இலக்கு உனக்காகவும், லட்சியம் சமூகத்திற்காகவும் இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங் காமல் இருக்க வேண்டும்.
அதோடு, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வறுமையும் வெறுமையும் உங்களை மாற்றக்கூடும். ஆனால், வெற்றிதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மிகச்சரியான வழிகாட்டி. நான் பல சவால்களை சந்தித்துள்ளேன். சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை. சுதந்திர நாட்டில்தான் பயப்படுகிறேன்.
நன்கு படித்து சிறப்பாக பட்டம் பெற்று அனைத்துத் துறைகளையும் நீங்கள் பங்கேற்று நேர்மையோடு, மக்களை நேசிப்பவர்களாகப் பணியாற்ற வேண்டும். நம்பிக்கையும் ஆர்வமும் இருந்தால் நமக்குள் ஆற்றல் பெருகும். உங்களால் சாதிக்க முடியும். சாதியுங்கள், சமூகத்தை உளமாற நேசியுங்கள். அநியாயத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்றார். நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். நிறைவில், மாணவிகள் சங்க இணைச் செயலர் பெனாசிர்பாத்திமா நன்றி கூறினார்.