

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடியே 28 லட்சத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்யவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் ரூ.39,565 கோடியும், வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.22,573 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடியே 28 லட்சம், வார்தா புயல் நிவாரண நிதியாக ரூ.264 கோடியே 11 லட்சம், தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ.2 கோடியே 6 லட்சம் என மொத்தம் ரூ.2,014 கோடியே 45 லட்சம் வழங்கப்படும் என கடந்த மார்ச் 23-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அதன்படி, தமிழகத்துக்கு ரூ.2,014 கோடியே 45 லட்சம் நிதியை விடுவித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.