

பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.பெருமாள், எட்டயபுரம் கிருஷ்ணமூர்த்தி உட்பட பல விவசாயிகள் எழுந்து நின்று, ‘‘வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசு வறட்சி நிவாரணம் அறிவிக்கவில்லை. மாறாக இடுபொருள் மானியம் என்ற பெயரில் அரசாணை வெளியிட்டுள்ளது. அதுவும் 5 ஏக்கர் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்று வேலை. இதை ஏற்க முடியாது. வறட்சி நிவாரணம் எப்போது வழங்கப்படும்? என்று கேள்வி எழுப்பினர்.
நிரந்தரத் தடை
``தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் தண்ணீரைத்தான் பெப்சி, கோக் நிறுவனங்கள் எடுக்கின்றன. எனவே, குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். ஆட்சியர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது தொடர்பான வழக்கில், மாவட்ட நிர்வாகம் தன்னையும் இணைத்துக் கொண்டு, விபரங்களை எடுத்து சொல்ல வேண்டும்” என்று, குரும்பூர் தமிழ்மணி, நாசரேத் ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். காந்திய சேவா மன்ற நிறுவனர் வீ.ராஜேந்திரபூபதி இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் ம.ரவிக்குமார் பேசும் போது, ‘‘வறட்சி நிவாரணம் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் தரவில்லை. நமது மாவட்டத்துக்கு வரும் தண்ணீரை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தினமும் கண்காணித்து தகவல் அளிக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணைகளில் 250 கன அடி தண்ணீர் திறந்தால், நமது மாவட்ட எல்லைக்கு 116 கன அடி தண்ணீர் வரும். இதை உறுதி செய்கிறோம். நமது மாவட்ட உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார்.
தண்ணீர் வழங்கவில்லை
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘பெப்சி, கோக் ஆகிய குளிர்பான ஆலைகளுக்கு தற்போது தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படவில்லை. வறட்சி முடிந்த பிறகு தான் அதுபற்றி பரிசீலிக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் கடந்த 5 ஆண்டுகளாகத் தான் உபரிநீர் செல்லவில்லை. 70 ஆண்டுகளாக உபரிநீர் அதிகமாக சென்றுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட விவசாயிகள், ‘‘உபரிநீரைக் கொண்டு விவசாயத்தை மேம்படுத்த தான் திட்ட மிட வேண்டும். பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு கொடுக்கக் கூடாது. அந்த ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று ஆவேசத்துடன் கூறினர்.
``பெப்சி, கோக் குடிப்பதை நாம் தவிர்க்கலாம். இதன் மூலம் அந்த ஆலையின் செயல்பாட்டைத் தடுக்கலாம்” என்றார் ஆட்சியர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சங்கரன் உட்பட சில விவசாயிகள், ‘‘தொழிற்சாலைகள் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க வேண்டும்” என்றனர்.
திருவரங்கனேரியை சேர்ந்த டிக்சன், ‘‘சீமைக்கருவேல மரங்களை அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார். உடன்குடி குணசீலன், ‘‘கலப்பட கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
தென்னை பாதிப்பு
இளையரசனேந்தல் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த கு.நாராயணசாமி உள்ளிட்ட விவசாயிகள், ``100 நாள் வேலை திட்டத்தின் போது கால்வாயை சுத்தம் செய்ய தீவைத்ததில் தென்னை மரங்கள் எரிந்து விட்டதாகவும், அவற்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கோரி இளநீர் குலைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
வறட்சியால் மரணடைந்த 3 விவாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவியை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜகோபால சங்கரா, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) முத்து எழில், பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், கோட்டாட்சியர்கள் தெ.தியாகராஜன் (திருச்செந்தூர்), அனிதா (கோவில்பட்டி) ஆகியோர் கலந்து கொண்டனர்.