

கப்பலில் சரக்காக கொண்டு வரப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் கடலில் கலக்கவில்லை. கப்பலை இயக்குவதற்கான பெட்ரோலிய எரிபொருள்தான் கடலில் கலந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதியதால், கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்துள்ளது. கடலில் பல கி.மீ. தொலைவுக்குப் பரவி யுள்ள எண்ணெயை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
எண்ணூர் பகுதியில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கப்பல்கள் மோதி விபத்துக்குள் ளான தகவல் கிடைத்ததும், கப்ப லில் உள்ள எண்ணெய் கசிந்ததா எனப் பார்த்தோம். ஹெலிகாப்டர் மூலம் பார்த்தபோது கப்பலுக்கு சேதம் இல்லை என தெரிய வந்தது. விபத்துக்குள்ளான கப்ப லில் 58 ஆயிரம் டன் பெட்ரோலி யப் பொருட்கள் இருந்தன. கப்ப லின் அடிப்பாகம் சேதம் அடைந் திருப்பதால் அங்குள்ள குழாய் களும் சேதமாகிவிட்டன. கப்பலில் சரக்காக கொண்டுவரப்பட்ட பெட் ரோலிய பொருட்கள் கடலில் கலக்க வில்லை. மாறாக, கப்பலை இயக்கு வதற்கான பெட்ரோலிய எரி பொருள்தான் கடலில் கலந் துள்ளது.
கடலில் இருந்து எண்ணெய் கசிவை எடுக்கும் கருவிகள் நம் மிடம் உள்ளன. எண்ணெய் படலம் கரைக்கு வந்ததால், கருவிகளைப் பயன்படுத்த முடியாமல் மனித சக்திகளைப் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. விபத்துக் கான காரணம் குறித்து விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டு, தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தால் கடல் மீன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். பொதுமக்கள் அச்சமின்றி மீன்களை உண்ணலாம்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எண்ணூர் பகுதியை நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘கச்சா எண்ணெய் நீரில் கலந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மீஞ்சூர், நெம்மேலி ஆகிய பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்ன ஆகுமோ என்ற கவலை ஏற்பட் டுள்ளது. மீன்பிடி தொழில் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, கடல் நீரில் கலந்துள்ள எண்ணெயைப் பிரித்தெடுக்க ஆகும் செலவு ஆகியவற்றுக்கு கப்பல் நிறுவனங்களிடம் இருந்து உரிய நஷ்டஈடு பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
கனிமொழி குற்றச்சாட்டு
எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணெய் கசிவுகளை பார்வை யிட்ட திமுக எம்.பி. கனிமொழி கூறியபோது, ‘‘கடல் நீரில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற நவீன தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தாமல் வாளிகள் மூலம் அகற்றி வருகின்றனர். இந்தப் பணி எந்தக் காலத்தில் முடியும் என தெரியவில்லை. துப்புரவுப் பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்புக் கவசம் கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளவில்லை’’ என்றார்.
திருமாவளவன் வேண்டுகோள்
கடலில் எண்ணெய் கசிவு களைப் பார்வையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘‘கடல் நீரில் எண்ணெய் கொட்டிய தால் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன் வாங்க மக்கள் அச்சப்படுகின்றனர். எண்ணெய் படலத்தை அகற்ற நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் வாளியைப் பயன்படுத்துவது ஏன்? மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்’’ என்றார்.
ஜி.கே.வாசன் பார்வை
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் எண்ணூர் கடல்பகுதியை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.