Last Updated : 03 Feb, 2015 03:57 PM

 

Published : 03 Feb 2015 03:57 PM
Last Updated : 03 Feb 2015 03:57 PM

அரசியலாகும் வனக்கல்லூரி மாணவர் போராட்டம்: உஷாராகுமா தமிழக அரசு?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம். இங்குள்ள மாணவர்கள் வனத்துறையில் உள்ள வனச்சரகர் பணியிடங்களை எங்களுக்கே முழுமையாக அளிக்க வேண்டும் என்று போராடியதில் 2009-ம் ஆண்டில் இந்த பணியிடங்களை 100 சதவீதமும் வனவியல் படிப்பவர்களுக்கே ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது அப்போதைய தி.மு.க. அரசு.

கடந்த 2014-ம் ஆண்டு இந்த பணியிடங்களில் 25 சதவீதம்தான் வனவியல் மாணவர்களுக்கு என்று மாற்றி உத்தரவிட்டது அ.தி.மு.க. அரசு. அப்போது அதை எதிர்த்து இரண்டு வார காலத்துக்கு மேல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் மாணவர்கள்.

இதில் தலையிட்டு பேசிய அமைச்சர்கள் இந்த இடஒதுக்கீடு குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் தீர்ப்பு வந்தபிறகு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். நீதிமன்றத் தீர்ப்பு வந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தங்கள் கோரிக்கை பற்றி அரசு தரப்பு எந்த அறிவிப்பும் செய்யாத சூழலில் 150-க்கும் மேற்பட்ட வனச்சரகர் பணியிடங்கள் தேர்வு குறித்த அறிவிப்பு வர அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் வனக்கல்லூரி மாணவர்கள். தங்களுக்கான 100 சதவீத இடத்தை அறிவிக்கக்கோரி காலவரையற்ற போராட்டத்தில் கடந்த 27-ம் தேதி இறங்கினர்.

கோயில் யானைகள் முகாம் நிறைவு விழாவுக்கு மேட்டுப்பாளையம் வந்த அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து, தங்கள் மனுவையும் கொடுத்தனர் மாணவர்கள். தொடர்ந்து அடுத்த நாள் கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. தங்கும் விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே இரவும் பகலும் இடைவிடாது போராட்டம் செய்து வருகின்றனர் மாணவ, மாணவிகள் 213 பேர். கடந்த 6 நாட்களாக மரக்கன்றுகளுக்கு ராக்கி கட்டியும், மரங்களை கட்டிப்பிடித்து கோரிக்கை ஒப்பாரி வைத்தும், மரங்களை தீச்சட்டி ஏந்தி வலம் வந்தும், முகங்களில் கரி பூசி, கண்களை கட்டிக் கொண்டும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர் மாணவிகள்.

இந்த சூழ்நிலையில் தற்போது வனக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பொது நல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி உள்ளன.

வனக்கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த மாணவ-மாணவிகளை முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. கோவை புறநகர் (வடக்கு) மாவட்ட செயலாளருமான சி.ஆர்.ராமச்சந்திரன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் சத்தியமங்கலம் எம்.எல்.ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சுந்தரம் மாணவர்களை சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நேற்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று மாலை வனக்கல்லூரி மாணவர்கள் தங்கள் வாழ்க்கை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய வனவியல் துறை சார்ந்தவர்கள் சிலர் கூறுகையில், ‘இதில் படிக்கும் மாணவ-மாணவியர் பெரும்பாலும் வெளியூர்வாசிகள். அவர்களுக்கு ஆதரவாக வனக்கல்லூரியின் பழைய மாணவர்களே உள்ளனர். இரவில் மட்டுமல்லாது அதிகாலை மாலை நேரத்திலேயே யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் காட்டுப்பகுதியில்தான் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இரவில் மாணவர்கள் வெட்டவெளியில் போராட்டம் நடத்துவதும் படுத்துறங்குவதும் எப்படிப்பட்ட ஆபத்துகளை விளைவிக்கும்? அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் இது வாழ்க்கை பிரச்சினை என்பதால்தானே? இப்போது வெளியில் உள்ள அமைப்புகள் பலவும், அரசியல் கட்சிகள் பலவும் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.

ஆனால் அரசு தரப்பில் அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை எங்கள் கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? இதில் அரசு தலையிடாவிட்டால் வேறு விதமான அரசியலாக மாறி விடவே வாய்ப்புண்டு. தமிழக அரசு இதுவிஷயத்தில் விழித்துக் கொள்வது நல்லது’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x