விஜய் ரசிகர்களின் தள்ளுமுள்ளு: தியேட்டர் அதிபர் பரிதாப பலி

விஜய் ரசிகர்களின் தள்ளுமுள்ளு: தியேட்டர் அதிபர் பரிதாப பலி
Updated on
1 min read

சென்னை அருகே கத்தி திரைப்படத்தை காண வந்த விஜய் ரசிகர்களின் நெரிசல், தள்ளுமுள்ளு காரணமாக நிகழ்ந்த விபத்தில் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன்(75) பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(75). திருநின்றவூர் பெரியபாளையம் பிரதான சாலையில், இவருக்கு சொந்தமாக லட்சுமி என்ற திரையரங்கு உள்ளது. இங்கு தீபாவளியையொட்டி நேற்றுமுன்தினம் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் வெளியானது. இதனால், காலை முதலே திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள் திரண்டனர்.

காலை 11.45 மணியளவில் முதல் காட்சி தொடங்கியது. திரையரங்கு அதிபர் கிருஷ்ணன் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, திரையரங்கு வாசலில் உள்ள கண்ணாடி கதவருகே நின்று கொண்டிருந்தார். அப்போது காலை காட்சி தொடங்கியதால் திரையரங்குக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரையரங்குக்குள் புகுந்ததால் கதவு அருகே உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இதில், ஒரு கண்ணாடித் துண்டு திரையரங்கு அதிபர் கிருஷ்ணன் தலையில் விழுந்தது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மேலும், கீழே விழுந்த அவர் மீது ரசிகர்கள் ஏறிச் சென்றனர். இதனால், அவர் உடல் நசுங்கியது. இதைக் கண்ட, திரையரங்கு ஊழியர்கள், உடனே அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனயில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in