Published : 02 Jan 2014 12:04 PM
Last Updated : 02 Jan 2014 12:04 PM

சிலிண்டர் விலை உயர்வு புத்தாண்டு பரிசா?- ஜெயலலிதா கண்டனம்

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் விலைவாசி, பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வு, பணவீக்கம் என தினம்தினம் மக்களை பல விதமான வழிகளில் துன்புறுத்திக் கொண்டிருக்கின்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, புத்தாண்டு பரிசாக மானியமில்லாத சமையல் எரிவாயு விலையை ஒரு உருளைக்கு 220 ரூபாய் உயர்த்தி மக்களை ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விலை உயர்வையும் சேர்த்து, ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

'புத்தாண்டு பரிசா?'

புத்தாண்டு தினத்திலே மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு தெரிவிப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு, நடைமுறை. இதையும் மீறி, துன்பத்தினை "புத்தாண்டு பரிசாக" மத்திய அரசு மக்களுக்கு அளித்திருப்பது ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல், இதுவரை எந்த அரசும் செய்திராத மாபாதகக் செயல் ஆகும்.

ஓர் ஆண்டிற்கு 9 சமையல் எரிவாயு உருளைகள் என்ற கட்டுப்பாட்டினை நீக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்துகின்ற நிலையில், ஏற்கெனவே அனுபவித்து வந்த சலுகையினை பறிக்கும் விதமாக, மானியமில்லா சமையல் எரிவாயு உருளைக்கான விலையை வரலாறு காணாத அளவுக்கு ஒரு உருளைக்கு 220 ரூபாய் என்று உயர்த்தி இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை நசுக்கும் செயல் ஆகும்.

ஏற்கெனவே விலைவாசி உயர்வினால், மாதா மாதம் பெருத்த இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்ற மாத வருவாய் பெறுவோர் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் இந்த விலை உயர்வு மூலம் மேலும் கூடுதல் சுமையை சுமக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தை விலையின் அடிப்படையில் இந்த சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்ற செயல்.

பெட்ரோல், டீசல் விலை என்பதாவது ஏற்றுமதி சமநிலை விலை மற்றும் இறக்குமதி சமநிலை விலை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், எரிவாயு விலையோ, இறக்குமதி சமநிலை விலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த விலை நிர்ணயம் முற்றிலும் நியாயமற்ற செயல். பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து பெட்ரோலியப் பொருட்களுக்கும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான செலவு, வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் சுத்திகரிப்பு செலவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதை பல முறை தான் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இதே அடிப்படையில் தான் எரிவாயுவின் விலையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த எரிவாயு விலை உயர்வினை நிச்சயம் தவிர்த்து இருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல்

சர்வதேச சந்தை விலையை மட்டும் அடிப்படையாக வைத்து சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை செப்டம்பர் 2012-ல் மத்திய அரசு நிர்ணயித்த போது, மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை 780 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 1,234 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான எண்ணிக்கை கட்டுப்பாட்டை நிர்ணயித்த இந்த சுமார் 15 மாத காலத்தில் 58 விழுக்காடு அளவுக்கு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, மக்களின் வலியையும், மன நிலைமையையும் கருத்தில் கொண்டு, மானியமில்லா சமையல் எரிவாயு உருளைக்கான விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் ஓர் ஆண்டிற்கு 24 என்ற அளவுக்காவது உயர்த்த வேண்டும் என்றும் மக்களின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x