

பட்டாபிராம் அருகே மிட்ன மல்லியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டா பிராம், மிட்னமல்லி, முத்தாப் புதுப்பேட்டை, பாரதி நகர், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், பாக்கம், பாலவேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் சீரான மின் விநியோகம் இல்லாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், 2013-ல் பட்டாபிராம் அருகே மிட்னமல்லி யில் துணை மின்நிலையம் அமைக்க மின்சார வாரியம் முடிவு செய்தது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளாகியும் துணை மின்நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இதுகுறித்து, கடந்த ஜூன் 23-ம் தேதி வெளியான ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் விளைவாக, தற்போது, மிட்னமல்லியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. துணை மின்நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட பணி கடந்த 15 நாட்களாக நடந்து வருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகபட்சமாக 8 மாதத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி முடிவுக்கு வந்துவிடும் எனவும் அவர்கள் கூறினர்.