

சென்னையில் கூடுதல் காவல் ஆணையர் சேஷசாயி, துணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கடந்த 17-ம் தேதி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் அறவழியில் இருந்தது. 21-ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றப்பட்டது குறித்து போராட்டக்காரர்களிடம் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் 6 முறை விளக்கினார். ஆனால், போராட்டம் கைவிடப்படவில்லை.
நாளடைவில் சில சமூக விரோத இயக்கங்களை சேர்ந்தவர்கள் மாணவர்களின் கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டனர். இது சம்பந்தமான ஆடியோ மற்றும் வீடியோக்கள் எங்களுக்கு கிடைத்தன. கடந்த திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் அவசரச் சட்டம் குறித்து விளக்கிக் கூறி அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினோம்.
இதை கூட்டத்துக்குள் நுழைந்திருந்த சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் விரும்பவில்லை. வெளியேறியவர் களைத் தவிர மீதம் இருந்தவர்கள் கடலை நோக்கி சென்றனர். நாங்கள் அவர்களை தடுக்கவில்லை. சமூக விரோதிகள் முதலில் மெரினா வந்தனர். இவர்களை நாங்கள் தடுத்தோம். அப்போது அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலையில் தகராறு தொடங்கியது. காலை 10 மணியளவில் போலீஸாரை குறிவைத்து தாக்கினர். தொடர்ந்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
காவல் நிலையத்தில் இருந்து பெண் போலீஸ் ஒருவரை பாலியல்ரீதியில் துன்புறுத்தினர். அந்த பெண் போலீஸ் தான் மைக்கில் கதறினார்.
இதற்கிடையில் 23 பைக்குகள், போலீஸ் வாகனங்கள் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடுக்குப்பத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மாணவர்கள் அல்ல. 6 சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள். மாணவர்கள் தாக்கப்படுவதாக தகவல் பரவியதால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் திரண்டனர். அவர்களிடம், துணை ஆணையர் சவுந்தர்ராஜன் உண்மை நிலையை எடுத்து கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால், சமூக விரோதிகள்தான் தொடர்ந்து செயல்பட்டனர்.
சமூக விரோதிகளின் தாக்குதலில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 102 போலீஸார் காயம் அடைந்தனர். குடியரசு தின விழாவை கொண்டாட விடக்கூடாது என்பதே சமூக விரோதிகளின் நோக்கம்.
ஜல்லிக்கட்டு போர்வையில் போராட்டம் திசை மாறிச்சென்றது. அதை கட்டுப்படுத்தி விட்டோம். குடியரசு தின விழாவை சீர்குலைக்க முயன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம். குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாட 27 போலீஸ் அதிகாரிகளை வெளியூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந் துள்ளோம் என்றனர்.