Published : 30 Aug 2016 06:22 PM
Last Updated : 30 Aug 2016 06:22 PM

முன்னாள் தலைமைச் செயலாளர் பணியிடை நீக்கத்துடன் நின்றுவிடாமல் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுக: ராமதாஸ்

முன்னாள் தலைமைச் செயலாளர் பணியிடை நீக்கத்துடன் நின்றுவிடாமல் யார் யாருக்குத் தொடர்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் நிலவியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவரின் பணியிடை நீக்கம் குறித்த அறிவிப்பையோ, அதற்கான காரணங்களையோ தமிழக அரசு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் அவர்கள் வகித்து வந்த பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊழலுக்கு துணை போனதும் தான் இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு காரணம் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதுதான் காரணம் என்றால், இருவர் மீதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிகவும் சரியானது தான்.

ஆனால், இவர்கள் மீதான நடவடிக்கைகள் மட்டும் போதுமானதா, இந்த ஊழல்களில் இவர்களைத் தவிர வேறு அதிகாரிகளுக்கோ அல்லது ஆட்சியாளர்களுக்கோ தொடர்பு இல்லையா என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினாவாகும்.

தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கும், ஒருகாலத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மறைமுக மோதல் காரணமாக ஊழல்கள் வெளியில் வருவதும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் நல்லது தான். ஆனால், அது 2 அதிகாரிகளின் பணியிடை நீக்கத்துடன் நின்றுவிடக் கூடாது. யார்,யாருக்குத் தொடர்பு என்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி, அவர்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூலிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x