

தஞ்சை மாவட்டத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள சாலியமங்கலம் கிராமம் நாகை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கலைச்செல்வி (20). இவரது தாய் இறந்துவிட்டதால், கலைச்செல்வி அதே ஊரில் உள்ள தன்னுடைய பெரியம்மா பாப்பம்மாள் வீட்டில் தங்கியிருந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்பக்கம் சென்ற கலைச்செல்வி, பின்னர் வீட்டுக்கு வரவில்லை. வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள முட்புதர் அருகே அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது மறுநாள் காலை தெரியவந்தது.
இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய அம்மாப்பேட்டை போலீஸார், கலைச்செல்வி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், சாலியமங்கலத்தைச் சேர்ந்த ரங்கநாதன்(32), குமார்(30) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முன்னதாக, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலைச்செல்வியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, அங்கு வந்த அவரது உறவினர்கள், இந்திய மாதர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
'பலாத்காரம் செய்யப்பட்டு கலைச்செல்வி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், போலீஸார் கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கலைச்செல்வியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், சடலத்தை பெற்றுக்கொள்வோம்' என கூறி, அங்கு மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களிடம் வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், பெருமாள், டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவதாக அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.