Published : 07 Oct 2014 05:24 PM
Last Updated : 07 Oct 2014 05:24 PM

கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடவேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார். எனவே, கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடவேண்டாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அமைதி, வளம், வளர்ச்சி” என்பதற்கேற்ப தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), காவல் துறை தலைமை இயக்குநர் கே.ராமானுஜம், இ.கா.ப., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்பால், பாசத்தால், மாறாப் பற்றால் மக்களும், சில அமைப்புகளும் தாங்களாகவே உணர்ச்சிவயப்பட்டு நடத்தும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசை இணைத்துப் பேசுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, கடந்த 40 மாதங்களாக அதைச் செயல்படுத்தியும் காட்டினார்கள். வளர்ச்சித் திட்டங்கள் மக்களை சென்றடைந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

இருப்பினும், தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய 2023 தொலைநோக்குத் திட்டம், 2014 ஆம் ஆண்டைய தொழிற் கொள்கை ஆகியவற்றில் உள்ள இலக்குகளை அடைவதற்கான வழியில் தமிழகத்தில் உள்ள அமைப்புகளும், சங்கங்களும், மக்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரின் மாய வலையில் விழவேண்டாம் என்றும் தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார்கள். எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுவே நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல் ஆகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x