

தமிழகம் முழுவதும் பசுமை பயணம் மேற்கொண்டுள்ள திருப்பூர் இளைஞர், நேற்று மதுரையில் மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் த.செல்வக்குமார். அரசு ஊழியரான இவர், தமிழகம் முழுவதும் பசுமை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில் அவர் மரம் வளர்ப்பு, பாலித்தீன் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று மதுரை வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், 250 மரக்கன்றுகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி மரம் வளர்ப்பு, பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து த.செல்வகுமார் கூறியது: ஒரு மனித உயிரை அழி த்தால் அதை கொலை என்கி றோம். ஆனால், மரங்கள் வெட்டப் படுவதையும், அவை அழி வதையும் சாதாரணமாக கடந்து செல்கிறோம். மனிதனைவிட அதிக ஆண்டுகள் வாழ்ந்து இந்த பூமியை மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது மனிதக் கொலையைவிட மிக மோசமானது. நாளுக்கு நாள் காற்று மாசை அதிகரித்து சுவாசிக்க தகுதியற்ற நகரமாக நமது குடியிருப்புகளை மாற்றி வருகிறோம். இதற்கு தீர்வு வேண்டியும், எதிர்கால சந்ததியினருக்கு தூய காற்று மற்றும் நகரை தருவதும் ஒவ்வொருவரின் கடமை. மரம் வளர்ப்பை நாம் மறந்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசு, மழையின்மை, வெப்பம் போன்ற சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். எவ்வளவு மரங்கள் வளர்க்கிறோமோ அந்த அளவுக்கு சுத்தமான காற்று கிடைக்கும்.
தண்ணீரைக் காப்பதில் காட்டிய அலட்சியத்தால் இன்று குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். காற்று மாசை கவனிக்காவிட்டால் சுவாசிக்க சுத்தமான ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் காலம் வரலாம். காற்றை இயற்கையாக சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளாக மரங்கள் உள்ளன. இதை உணர்ந்து எல்லோரும் மரங்களை வளர்க்க வேண்டும். மற்றவர்களையும் மரம் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். பாலிதீன் நுரையீரலை பாதிக் கிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக துணிப் பைகளையும் என்னால் முடிந்தளவு வழங்கி மற்றவர்களை அதை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.