

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுவையில் நடைபெறும் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுவையில் இன்று (சனிக்கிழமை) பந்த் நடந்துவருகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், பேருந்துகள், ஆட்டோக்கள் மற்ற போக்குவரத்து வாகனங்கள் இயங்காததாலும் அங்கு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் பகுதிகளில் சனிக்கிழமை பந்த் நடைபெறும் என புதுச்சேரி நகர அதிமுக செயலாளர் ஏ.ரவீந்திரன் அறிவித்திருந்தார். பந்த் அறிவிப்பை வெளியிட்ட அவர்: “அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்த புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை பந்த் போராட்டம் நடைபெறும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகள் மற்றும் தியேட்டர்கள் அடைக்கப்பட்டிருக்கும். பேருந்து, ஆட்டோ, டெம்போ எதுவும் இயங்காது. இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் ஒத்துழைப்பு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அமைதியான முறையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, இன்று காலை முதலே புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணியளவில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தம் எம்.எல்.ஏ தலைமையில் 20 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருப்புச் சட்டை அணிந்தவாறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்ப்ழகன், ஓம்.சக்தி சேகர், பெரியசாமி, பாஸ்கார் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் பேரணியாக சென்றனர். அண்ணா சிலை அருகே பேரணி நிறைவு பெற்றது. அங்கு போராட்டமும் நடைபெற்றது. அப்போது பேசிய எம்.எல்.ஏ. அன்பழகன், அதிமுக கோரிக்கையை ஏற்று முழுஅடைப்புக்கு ஆதரவு அளித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காரைக்காலில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். காரைக்கால், மாஹே, யேனாம் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.