Published : 10 Jan 2017 03:14 PM
Last Updated : 10 Jan 2017 03:14 PM

பொங்கலுக்கு பொதுவான விடுமுறை விட முடியாது ஏன்?- தமிழிசை விளக்கம்

பொங்கல் பண்டிகைக்கு பொதுவான விடுமுறை விட முடியாது என்று கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதற்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொங்கல் பண்டிகை 15 வருடங்களாக சிறப்புப் பட்டியலில் தான் இருக்கிறது. இந்தியா முழுவதும் பொதுவாக இருக்கும் பண்டிகைகள் சில. உதாரணத்திற்கு சுதந்திர தினம், குடியரசு தினம்.

சில மாநிலங்களில் இருக்கும் பண்டிகைகள் சில. குறிப்பாக மகர சங்கராந்தி. பொங்கல் சில மாநிலங்களில் சில நாட்களும், சில மாநிலங்களில் வேறு நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. சில பண்டிகைகள் அந்த மாநிலத்தில் மட்டுமே உண்டு. அதனால் பொது விடுமுறை என்பது பாரத தேசம் முழுவதும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் குடியரசு தினம் போன்றது.

மாநிலத்தில் கொண்டாடும் பொங்கல் போன்றது அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்கள் என்று கொண்டாடுகிறார்களோ அன்று அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதே பொங்கல் பக்கத்து மாநிலத்தில் அடுத்த நாள் கொண்டாடும்போது அடுத்த நாள் அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பொதுவான விடுமுறை விட முடியாது, இது பொதுமக்களின் கொண்டாட்டத்திற்கு உதவுவதற்குதான்.

இன்னொன்று எப்பொழுதுமே என்று விடுமுறை வேண்டும் என்பது இங்குள்ள ஊழியர் சங்கங்கள்தான் முடிவு செய்கிறார்கள். இந்த முறை பொங்கல் சனிக்கிழமை வருவதால் சனிக்கிழமை ஏற்கெனவே விடுமுறை நாளாக இருப்பதால் விடுமுறைக்கே விடுமுறை அளிக்க முடியாது என்ற காரணத்தினால் அந்தப் பட்டியலில் இருந்து எடுத்து ஏற்கெனவே விடுமுறை இருப்பதனால் பொங்கலுக்கான விடுமுறை இன்னொரு நாள் இன்னொரு பண்டிகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று ஊழியர்களுக்கு உதவுவதற்கு தான் இந்தப் பட்டியல் இப்படி செய்யப்பட்டிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் இந்தப் பட்டியல் ஜூன் மாதம்தான் எப்போதுமே வெளியிடப்படும். கடந்த ஜூன் மாதமே பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது, வேண்டுமென்றே இன்றைய தினம் ஏதோ மத்திய அரசு திடீரென்று பட்டியலில் இருந்து எடுத்துவிட்டது போலவும் திடீரென்று மாற்றம் கொண்டுவந்துவிட்டது போலவும் தமிழர்களுக்கு எதிராக நடப்பதுபோலவும் ஒரு மாய தோற்றத்தை வேண்டுமென்று உள்நோக்கத்தோடு பல கட்சிகளும் செய்கின்றன. அன்புமணி, திருமாவளவன் போன்றவர்களும் உண்மை நிலையை உணர்ந்து எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆக வேண்டுமென்று இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். தமிழக மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இவர்கள் வேண்டுமென்றே போராட்டம் செய்ய வேண்டும் என்பதிற்காக போராடுகிறார்களே தவிர எந்த விதத்திலும் இதில் மாற்றம் ஏற்படவில்லை.

எப்போதுமே உள்ள நடைமுறைதான், இன்னும் சொல்லப் போனால் திமுகவினர் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். ஸ்டாலின் அங்கம் வகித்த ஆட்சியிலும் இதே மாதிரி சிறப்புப் பட்டியல்தான் இருந்தது என்பதை உணர வேண்டும். அதற்கான ஆதாரங்கள் அத்தனையும் அந்த அரசாங்கப் பட்டியலில் இணைத்திருக்கிறோம்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x