Published : 04 Jan 2017 11:10 AM
Last Updated : 04 Jan 2017 11:10 AM

செயல் தலைவர் என்பதை நான் பதவியாக கருதவில்லை: ஸ்டாலின் ஏற்புரை

திமுக செயல் தலைவர் பதவியை கட்சி தனக்கு திடீரென வழங்கிவிடவில்லை. அந்த முடிவு யோசித்து, ஆலோசித்து, சிந்தித்து எடுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூடியது. உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதி பங்கேற்காததால் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது.

பொதுக்குழுவில், திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை அறிவித்து தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், "அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். நிகழ்ச்சி நிரலில் நிறைவாக நான் ஏற்புரை, நன்றியுரை ஆற்றப்போகிறேன் என்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நான் நன்றியுரை ஆற்றுவதற்காக வரவில்லை. ஏற்புரை ஆற்றுவதற்காக மட்டும் தான் நான் உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன்.

நம்முடைய பொதுச் செயலாளர் இங்கே பேசுகின்றபோது, "தலைவர் மேடைக்கு வர முடியாமல், நடைபெறக்கூடிய பொதுக்குழுவாக இந்த பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்ட தலைவருக்கு சற்று ஓய்வு கொடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு, நல்லமுறையில் அவர் தேறி வர வேண்டும் என்ற நிலையில், ஓய்வுக்கே ஒய்வு கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நமது தலைவருக்கு, ஓய்வு தந்திட வேண்டுமென்ற நிலையில், நம்முடைய பொது செயலாளர், நமது முதன்மைச் செயலாளர், நம்முடைய முன்னோடிகள் எல்லாம் கலந்து பேசி, இங்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் விதிமுறைகளில், சிறு திருத்தத்தைச் செய்து, அதனடிப்படையில், நம்முடைய பொதுச் செயலாளர் முன்மொழிய, முதன்மைச் செயலாளர் வழிமொழிய, செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என்னிடத்தில் வலியுறுத்தி, வற்புறுத்தி, அந்த நிலையில் இந்த பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்து, உங்களுடைய பேராதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடிய நான் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் என்று தயவுசெய்து யாரும் கருதி விடக்கூடாது.

"உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்க, உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்க" என்று சொல்லி, சொல்லி, சொல்லித்தான் இந்த இயக்கத்தில் எனது முதல்கட்டப்பணி தொடங்கியது.

அப்படி தொடங்கிய எனது பணியில் பல்வேறு பொறுப்புகளையும் அடைந்தேன். அந்தப் பொறுப்புகளுக்கு எல்லாம் வந்தபோது நான் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். அளவிட முடியாத அளவிற்கு பெருமைப்பட்டேன். ஆனால், இன்றைக்கு அந்த நிலையில் நானில்லை. இதுதான் உண்மை.

அன்றைக்கு அவற்றையெல்லாம் பெருமையோடு வரவேற்று, ஏற்றுக் கொள்கின்ற நேரத்தில், இன்றைக்கு தலைவர் அவர்கள் உடல் நலம் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், இந்தப் பொறுப்பை ஏற்கின்ற நேரத்தில் அந்த மகிழ்ச்சியை என்னால் அடையமுடியவில்லை.

எனவே ஒரு கனத்த இதயத்தோடுதான், உங்கள் அன்போடு, உங்கள் உற்சாகத்தோடு, உங்கள் பேராதரவோடு இந்தப் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக நான் உங்களிடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதிகம் பேச முடியவில்லை. பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்றை நான் குறிப்பிட விரும்புவது, செயல் தலைவர் என்று சொன்னால், தலைவருக்கு துணை நிற்கக்கூடிய நிலையில் தான் எனது பணி நிச்சயமாக அமையப்போகிறது.

தலைவர், பொது செயலாளர், அதனைத்தொடர்ந்து நமது முதன்மைச் செயலாளர், இங்கு இருக்கக்கூடிய கழக முன்னோடிகள் காட்டக்கூடிய வழியில் நிச்சயமாக, உறுதியாக நின்று, இயக்கப்பணியை உங்களுடைய ஒத்துழைப்போடு ஆற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

சென்னை மாநகரத்தின் மேயராக நான் பொறுப்பேற்ற நேரத்தில் கருணாநிதி சொன்னார், "மேயர் என்பது பதவியல்ல, ஒரு பொறுப்பு. அதை நான் பொறுப்பு என்று உன்னிடத்தில் எடுத்துச் சொல்லக் காரணம் என்னவென்று கேட்டால், பொறுப்போடு நீ பணியாற்ற வேண்டும், மக்களுக்கு நீ பொறுப்போடு கடமையாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

ஆக, செயல் தலைவர் என்பதை நான் பதவியாக கருதவில்லை, கருணாநிதி சொல்வது போல, ஒரு பொறுப்பாக கருதி, பொறுப்போடு பணியாற்ற நான் உறுதியெடுத்துக் கொள்கிறேன், என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லிக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் ஏற்புரை ஆற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x