

சென்னையில் சின்னமலை - விமான நிலையம், ஆலந்தூர் - புனித தோமையர் மலை இடையே அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பணியாளர், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் இ.கருணாநிதி (பல்லாவரம்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஜூன் 29-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சின்னமலை - விமான நிலையம், ஆலந்தூர் - புனித தோமையர் மலை இடையே அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் வகையில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மற்ற வழித் தடங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். அதற் கேற்ப பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவுப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கு கடந்த ஜூலை 23-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
3 புதிய வழித் தடங்களில் 104.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.