அரசியல்வாதிகள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்களா? - ஆதாரமில்லாமல் ஆளுநர் குற்றம் சுமத்துகிறார்: சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

அரசியல்வாதிகள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்களா? - ஆதாரமில்லாமல் ஆளுநர் குற்றம் சுமத்துகிறார்: சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு
Updated on
3 min read

புதுச்சேரி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகின்றனர் என்று சமூக வலைதளங்களில் ஆளுநர் கிரண்பேடி செய்தி பரவவிட்டு வருகிறார். ஆதாரம் இருந்தால் என்னிடம் தரலாம். ஆதாரமில்லாமல் அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் ஆளுநர் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் நாராயணசாமி, சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது:

கடந்த ஆண்டுகளில் மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகளில் இட ஒதுக்கீடு இல்லை. தற்போது எங்கள் விடா முயற்சியால் மத்திய அரசிடம் இருந்து முதன்முறையாக இந்தாண்டு புதுச்சேரி மாணவர்களுக்கென தனி ஒதுக்கீடு பெறப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான இட ஒதுக்கீட்டை பெறவில்லை என முன்னாள் முதல்வர் ஏற்கெனவே பேரவையில் தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் சேர்த்து மொத்தம் 318 பட்டமேற்படிப்பு இடங்களில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் ஒதுக்கீட்டின்படி புதுச்சேரி மாணவர்களுக்கென 162 இடங்கள் பெறப்பட்டன. இதற்கு திறந்த முறையில் ஆன்லைன் மூலம் 267 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அனைவரும் 2 கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 162 இடங்களில் 91 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர், மத்திய அரசு, எம்சிஐ வழிகாட்டுதல் படி மீதம் இருந்த நிரம்பாத 71 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றது. ஒரு இடம் கூட நிரம்பாத நிலை இருக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டது. இதனால் மேலும் 10 பேருக்கு இடங்கள் கிடைத்தன.

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான கட்டணக் குழு அரசு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.13 லட்சம் என நிர்ணயித்தது. குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை என இதை எதிர்த்து தனியார் கல்லூரி நிர்வாகங்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

முன்னாள் நீதிபதி கட்டணக் குழுவை மீண்டும் கூட்டி அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.5.5 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.14 லட்சம் என நிர்ணயித்தார். இந்நிலையில் சென்டாக் பரிந்துரைத்த மாணவர்களை சேர்க்க கட்டணக்குழு உத்தரவிட்டது. அரசும் இதற்கு உத்தரவிட்டது. மாணவர்களுக்கு மறுப்போ, துன்புறுத்தலோ இருக்கக்கூடாது என்பதற்காக மாணவர்களிடம் வரைவோலைகள் பெறப்பட்டு அரசே அவற்றை கல்லூரிகளுக்கு அனுப்பியது.

ஆளுநரின் தவறான செயல்பாடு

கடந்த 30-ம் தேதி ஆளுநர் சென்டாக் அலுவலகத் துக்கு சென்று அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிர்வாக ஒதுக்கீடாக தரப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை தவறாக கூறி சென்டாக் ஒருங்கிணைப்பாளரிடம் சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கும்படி உத்தரவிட்டார். இது முற்றிலும் தவறான செயல்பாடாகும்.

நிரம்பாத இடங்கள் அனைத்தும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடும் நாடு முழுவதும் இதே நிலை தான் உள்ளது. இருந்தபோதிலும் 26 மாணவர்களுக்கு ஒதுக்கீடு கடிதம் தரும்படி கூறினார். இதில் 22 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும், 4 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரியது.

நிகர்நிலைப் பல்கலைக் கழங்களும் மாநில அரசின் கட்டண நிர்ணய குழுவின் அதிகார வரம்பில் வருகிறது என துணைநிலை ஆளுநர் உறுதி அளித்ததால் 22 மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைகழங்களில் சேர்ந்தனர். இதுகுறித்து கட்டணக்குழுத் தலைவரும், மாநில சட்டத்துறையும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டணக் குழுவின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளனர்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பல கட்டபேச்சு வார்த்தை நடத்தினார். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினர். கட்டணத்தை பெற்று மாணவர்களை சேர்க்க வேண்டும் என எங்கள் அரசு எம்சிஐ, மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல் அடிப்படையில் முறையாக செயல்பட்டுள்ளது.

26 இடங்களைப் பொறுத்தவரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ரூ.5.5 லட்சத்தில் சேர்க்கிறேன் என ஆளுநர் கூறியதால் அவர்கள் சேர்ந்தனர். வெளிப்படையான நேர்மையாக ஆன்லைன் முறையில் மாணவர்களை தேர்வு செய்துள்ளோம். முந்தைய காலங்களில் இடங்களை விற்று விட்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். ஒரு அரசு இடம் கூட தனியார் மருத்துவ கல்லுாரிக்கு மாற்றப்படவில்லை.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தனது அறிக்கையில் கூற, தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன.

பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்:

சென்டாக் தேர்வு செய்த மாணவர்களை முழுமையாக சேர்க்க அரசு முயற்சி எடுக்குமா?

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்:

சென்டாக் மருத்துவ மேல்நிலைப்படிப்பு சேர்க்கைக்கான விஷயத்தில் ஆளுநர் 2, 3 தினங்களாக ஒரு நாடகம் நடத்தியுள்ளார். அதற்கு முதல்வர் பதில் கொடுத்துள்ளார். புதுச்சேரி மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக கடந்த 5 மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேற்று (நேற்று முன்தினம்) இரவு கூட ரூ.5.50 லட்சம் கட்டணத்தில் சேர்த்துக்கொள்ளும்படி தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகிகளை அழைத்து வலியுறுத்தியுள்ளேன். இன்று (நேற்று) மதியம் நான் நேரடியாக கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்வேன். 22 மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை செய்து நிகர் நிலை பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய வைத்துள்ளார். ஆளுநருக்கு துணை நிலை ஆளுநர் பதவியில் உட்காரும் தகுதியில்லை.

அனந்தராமன் (காங்கிரஸ்):

எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி:

புதுச்சேரி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகின்றனர் என்று சமூக வலைதளங்களில் ஆளுநர் கிரண்பேடி செய்தி பரவவிட்டு வருகின்றார். ஆதாரம் இருந்தால் என்னிடம் தரலாம். ஆதாரமில்லாமல் அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் ஆளுநர் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்.

அன்பழகன் (அ.தி.மு.க.):

கட்டணத்தை ஏன் முன்கூட்டியே நிர்ணயிக்கவில்லை? சுய நிதி மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே, நிகர் நிலை பல்கலைக் கழகங்களுக்கும் பொருந்தும் என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால் முதல்வர் நாராயணசாமி பொருந்தாது என்று கூறி தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்:

கட்டண நிர்ணயக்குழு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை. இதுபற்றி முதல்வர் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in