

சட்டப்பேரவைத் தேர்தலில் தான் பணம் வாங்கியதாக திமுக தன் மீது கூறும் பழிச்சொல்லை தாங்க முடியவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச்செயலர் வைகோ கலந்து கொண்டு பேசிய போது, “திமுக கொள்கையை விட்ட கட்சி. ஆனால் நான் கொள்கையை விடவில்லை. விடுதலைப்புலிகள் உதவியுடன் நான் கருணாநிதியை கொலை செய்ய முயன்றதாக என்மீது திட்டமிட்டு பொய்ப்பழி சுமத்தினர். கட்சியிலிருந்து என்னை வெளியேற்றினர்.
அப்போது நான் அஞ்சவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் நான் பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக திமுகவினர் செய்த பிரச்சாரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் எவ்வளவோ பழிச்சொல்லை தாங்கி விட்டேன். பழிச்சொல் ஏற்கவே நான் பிறந்திருக்கிறேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் நீங்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வைகோவுக்கு ஈகோ அதிகம் என்பதால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டார் என்றார்கள். ஆனால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தேன். திருச்சியில் மாவட்டச் செயலாளர்களை ஒருங்கிணைத்து மாநாட்டை நடத்தினேன். தேர்தலில் அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளை எதிர்த்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதே பெரிய வெற்றி” என்றார் வைகோ.