ஏப். 25-ம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

ஏப். 25-ம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
3 min read

விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 22-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் ஏப்ரல் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திக்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.

டெல்லியில் தமிழக விவசாயி கள் போராடி வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள், அமைப்பு களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டிருந்தது. இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 22 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர் பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்ட முடிவில் பேசியதாவது:

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. விவசாயிகளும் அனைத்துக் கட்சித் தலைவர் களும் பிரதமரை சந்திக்க தீர்மானிக் கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும். விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளு படி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அண்டை மாநிலங்கள் தடுப்பணைகள் கட்டுவதை தடை செய்ய வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவசாய பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவு காண வேண் டும். குடிநீர் பிரச்சினைக்கு போர்க் கால நடவடிக்கை வேண்டும். முழு மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ‘நீட்’ தேர்வுக்கு விதிவிலக்களிக்கும் சட்டத் திருத்தத்துக்கு உடனடி ஒப்பு தல் அளிப்பதுடன், தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முக்கிய தீர்மானமாக, விவசாயி கள் பிரச்சினைகளுக்கு ஆதரவளிக் கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையிலும், தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் ஏப்ரல் 25-ம் தேதி நடத்துவது என முடிவெடுக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த தீர்மானங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஏப்ரல் 22-ம் தேதி விளக்கப் பொதுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றுவார்கள். முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கூட்டத்தில் பங் கேற்ற கட்சித் தலைவர்கள் கூறிய தாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:

இந்த கூட்டத்தை தேர்தலுடன் தொடர்பு படுத்த வேண்டாம். அரசியல் அணியின் அழைப்பு என்று பார்க்காமல், மக்களின் பிரச்சினை என்பதை உணர்ந்து அனைத்து தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். முழு அடைப்பு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி நடத்தப் படும் போராட்டம் என்பதால், பாஜ கட்சியை அழைக்கவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர்:

விவசாயிகள் தொடர்ந்து 35 நாட்களாக அறப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை முடி வுக்கு கொண்டு வரும் விதமாக பிரதமர் விவசாய தலைவர்களை அழைத்து பேச வேண்டும். இது அரசியல் ரீதியாக தேர்தலை பற்றி பேசும் கூட்டமல்ல. விவசாயிகள் பிரச்சினை மட்டுமே இதில் பேசி னோம். எதிர்காலத்தில் சந்தர்ப்ப சூழல் வரும்போது கூட்டணி பற்றி பேசுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் இரா.முத்தரசன்:

தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பாரா முகமாக உள்ளது. வார்தா, வறட்சி நிவாரணமாக ரூ.62 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது. பெய ரளவுக்கு அதில் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளுக்காக கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது வரவேற்கதக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

அரசியலாக்க வேண்டாம்!

அனைத்துக் கட்சிக் கூட்ட முடி வில், தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற் காதது தொடர்பாக செய்தியாளர் கள் ‘‘ஒரு சில கட்சிகள் இக் கூட்டத்தில் விடுபட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் அழைக்கப் படுவார்களா?’’ என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலி னிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கை யில், ‘‘இதை அரசியலாக்க வேண்டாம். நானும் அரசிய லாக்க விரும்பவில்லை. இது விவசாயிகளின் பிரச்சினையை முன்வைத்து நடத்தும் கூட்டம்’’ என்றார்.

2008க்குப் பின்!

திமுக நேற்று நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கடந்த 2008-க்குப் பின் இடதுசாரி கட்சிகள் பங்கேற்றுள்ளன. 2008-க்கு முன் திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் 2011-ம் ஆண்டு, அதிமுக கூட்டணிக்கு மாறின. அதன்பின், 2016-ல் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்காமல், மக்கள் நலக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தன. அதன்பின் தற்போது, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமே மக்கள் நலக்கூட்டணியில் உள்ளன. மற்ற கட்சிகள் பிரிந்துவிட்டன. தற்போதுதான் இடதுசாரி கட்சிகள் விவசாயிகள் பிரச்சினைக்காக திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் வந்தபோது, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கிரிராஜன் காலில் விழுந்து வணங்கி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in