தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க கல்விக்குழு அமைக்க வேண்டும்: மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க கல்விக்குழு அமைக்க வேண்டும்: மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த ஆசிரியர்கள் கோரிக்கை
Updated on
1 min read

தேசிய கல்விக்கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கல்விக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நிர்வாகிகள் ஜி.சாந்தி, டி.ராமஜெயம், பி.ஜெகன், எம்.ரேவதி உள்ளிட்டோர் கோட்டையில் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 1968-ல் டி.என்.கோத்தாரி தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு கல்விக் கொள்கையை உருவாக்கியது. அதன்பிறது 1986-ல் வெளியான கல்விக் கொள்கையில் 1992-ல் சில திருத்தங்களுடன் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையை தயாரித்த டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் தலைமையிலான ஐவர் குழுவில் 4 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள், ஒருவர் மட்டுமே கல்வியாளர்.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட்டு அதன் மீது கருத்துக்கூற 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அவரவர் தங்கள் தாய்மொழியில் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய கல்விக்குழு அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதுதொடர்பாக தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in