

ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாதான் தைப் பொங்கல் திருவிழாவாகும். பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகும்.
அண்மைக் காலமாக விவசாயிகள் வாழ்வு கண்ணீர்க் களமாகிவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதரங்களான நதிகளின் நீர் ஆதாரங்களுக்கு அண்டை மாநிலங்களால் ஆபத்து சூழ்ந்துள்ளது. ஏற்படும் கேடுகளைத் தடுக்க வேண்டிய கடமை செய்யாத மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு வஞ்சகம் புரிவதால், எதிர்வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ காங்கிரஸ் கட்சிக்கு தோள் கொடுக்க முற்படும் அரசியல் கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்வதே தமிழக மக்களின் தலையாய கடமை ஆகும்.
மனிதகுல வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனத்துக்கும் இழைக்கப்படாத கொடுமையும், படுகொலையும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் இனத்திற்குச் சிங்களப் பேரினவாத அரசால் இந்திய காங்கிரஸ் அரசின் துணையோடு நடத்தப்பட்டது.
துன்ப இருளில் இன்னமும் தவிக்கும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க, விடியலின் வெளிச்சத்தை அவர்கள் காண, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இப்பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம்.
வருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தாய்த் தமிழகத்திலும், தமிழ் ஈழத்திலும், தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கு நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.