Published : 03 Jan 2016 01:01 PM
Last Updated : 03 Jan 2016 01:01 PM

இணைவோம்... இணைப்போம்..! - மக்கள் கருத்து

டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன், ‘கேர் எர்த்’ அறக்கட்டளை

சென்னை வெள்ளத்துக்கு ஒரு காரணத்தை சொல்ல முடியாது. நிறைய விஷயங்கள் ஒரே நேரத்தில் தவறாக நடந்ததுதான் காரணமாக இருக்கிறது. 1995-2006 வரையிலும் மழை அளவின் புள்ளி விவரங்களை பார்க்கும்போது அடிக்கடி வெள்ளம் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. சென்னை மாநகரத்தின் அடிப்படையை தெரிந்து கொள்ளாமல் திட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டது முக்கிய தவறாக இருக்கிறது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெள்ளம் ஏற்படுகிறது. இயற்கை நமக்கு கால இடைவெளியை கொடுக்கிறது. நாளுக்கு நாள் மக்களின் அடர்த்தி அதிகமாகி வருகிறது.

சென்னை விரிவாக்கத்தில் முறையான திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சதுப்பு நிலங்களை பாதுகாக்க தமிழக அரசு சட்டப்படி ஆணையம் அமைக்க வேண்டும். ஆக்க பணிகளை மேற்கொள்ள எங்களுடைய ஆராய்ச்சி பணிகள் எப்போதும் துணையாக இருக்கும் என்று ஜெயஸ்ரீ வெங்கடேசன் பேசினார்.



பொறியாளர் ஜி.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால், அது தண்ணீருக்காக தான் நடக்கும். 20-ம் நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்ததைப் போல், 21-ம் நூற் றாண்டை தண்ணீர் தான் தீர்மானிக்கும்.

இந்த தண்ணீரின் முக்கியத்துவத்தை நம் முன்னோர் உணர்ந்திருந்ததால் தான் பல்வேறு கட்ட நீர்நிலையை உருவாக்கி இருந்தனர். ஒவ்வொரு பொருட்களையும் உற்பத்தி செய்ய தணணீர் அவசியமானதாக இருக்கிறது. இதை புரிந்து கொண்ட உலக நாடுகள், மற்ற நாடுகளில் உற்பத்தி செய்து பொருட்களை விற்கின்றனர். தண்ணீர் ஆதாரத்தை வளர்ந்த நாடுகள் பாதுகாத்து கொண்டு வருகின்றன. நீரின் அரசியலை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் சக்கையை கொண்டு நிரப்பி விற்கப்படுவதுதான் பாட்டீல் தண்ணீர். மெட்ரோ வாட்டர் தான் சிறந்த குடிநீர். இதை நாம் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று சுந்தர்ராஜன் பேசினார்.



பியூஷ் மானுஷ், சேலம் மக்கள் குழு

பெற்றோர் இல்லாமல் கூட ஒருவர் வாழ்ந்துவிடலாம். ஆனால், நீர் மற்றும் காற்றின்றி யாரும் வாழ்ந்திட முடியாது. சேலத்தில் அம்மாப்பேட்டை ஏரியை நாங்கள் தூர்வாரினோம். அப்போது 3 அடி ஆழம் வரை பொதிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை நாங்கள் கடுமையாக போராடி அகற்றினோம். கந்தமலையில் 6 ஆயிரம் ஏக்கரில் கனிம வளத்தை வெட்டி எடுப்பதற்காக 3 நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெற்றிருந்தன. அந்த அனுமதியை போராடி தடுத்தோம்.

இயற்கையோடு இணைந்து தொழில் செய்து வாழ்ந்தால், நல்ல ஆரோக்கியத்தையும் உடல்நிலையும் பெறலாம். மூங்கில் பொருட்களை தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறேன். அதில், 20 பேர் வேலை செய்தனர். இதன் மூலம் எனக்கும், பணி செய்பவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் நிச்சயமற்ற வேலையை கொடுப்பதுடன் சுற்றுச்சூழலையும் கெடுக்கின்றன. நீர், மண், வெயில் ஆகியவை உடலில் படுகிற மாதிரியான தொழிலை செய்தால் உடல்நிலை நல்ல அளவில் இருக்கும் என்று பியூஷ் மானுஷ் பேசினார்.



ஆர்.ஜெ.ரஞ்சித் டேனியல், பேராசிரியர்

அன்று நீர்நிலைகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டன. குடிக்கவும், குளிக்கவும், கால்நடைகளை கழுவவும் அவை பயன்படுத்தப்பட்டன. அவை தூர் வாரப்பட்டன. அவற்றில் தாமரை செடிகள் வளர்க்கப்பட்டன. நீர்நிலைகள் தூய்மையாக இருந்தன.

இன்று, நீர்நிலைகளில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பல நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக நீர்நிலைகளில் விடப்படுகிறது. நீர் நிலைகள் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளன. அதனால் குடிநீர் மாசுபட்டுள்ளது. மேலும் பாதிப்பு என்னவென்று தெரியாமல் அதில் வெளிநாட்டு மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அவற்றில் இப்போது ஆகாயதாமரை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு தாவரங்கள் வளர்ந்துள்ளன. அழிந்துபோன நீர்நிலைகளை மாற்றுவது சிரமம். இருக்கும் நீர்நிலைகளை மாசற்ற, தூய்மையான நீர்நிலைகளாக மாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் ரஞ்சித் டேனியல் பேசினார்.



சி.சீனிவாசன், இந்திய பசுமை சேவை அமைப்பு

வீட்டில் எஞ்சுகிற பொருட்களை 12 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தினால் அது குப்பையல்ல. அதனை செல்வம் என்று அழைக்கிற அளவுக்கு அது பயனை அளிக்கும்.

சந்தை மற்றும் திருமண மண்டபங்களில் வெளியாகும் காய்கறி கழிவுகளை 4 மணி நேரத்திலும் , இறைச்சிக் கழிவுகளை 3 மணி நேரத்திலும் அப்புறப்படுத்த வேண்டும். அப்படி அப்புறப்படுத்தப்படும் உணவுகளை பிரித்து கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

ஒரு வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் குப்பையில் இருந்து குறைந்தபட்சம் ரூ.3 சம்பாதிக்க முடியும். சென்னையை 18 மாதத்தில் குப்பையில்லா நகரமாக மாற்ற முடியும். அரசும் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். குப்பை பிரச்சினைக்கு முக்கிய காரணம் பொதுமக்கள் கிடையாது, அதனை அகற்றும் ஆட்கள் தான் என்று சி.சீனிவாசன் பேசினார்.



டி.நரசிம்மன், தாவரவியல் ஆராய்ச்சியாளர்

சென்னை மாநகரம் முல்லை அல்லது நெய்தல் நில வகையை சேர்ந்தது. கடலூர், சென்னை போன்ற கடலோர நகரங்களில் காற்றின் சீற்றம், தண்ணீரின் வேகம் ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடிய காடுகள் முன்பு இருந்தன. அவை இப்போது இல்லை. பனை மரத்தால் 801 பலன்கள் உண்டு. அந்த பனை மரங்கள் இன்றைக்கு மெல்ல அழிந்து அடையாளச் சின்னங்களாகிவிட்டன.

வனத்துறை மரம் நடவேண்டும், பொதுப்பணித் துறை வளர்க்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறை அதை காக்க வேண்டும். இந்த 3 துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், பசுமையை இழக்கிறோம். இன்றைய பாடத் திட்டத்தில் மர மேலாண்மை பற்றிய பாடங்கள் இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று டி.நரசிம்மன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x