Published : 03 Sep 2016 07:07 AM
Last Updated : 03 Sep 2016 07:07 AM

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்றார்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சென்னமனெனி வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பேற்பதற்காக வித்யாசாகர் ராவ் நேற்று காலை 11 மணிக்கு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஜெயலலிதா பொன் னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது ஆளுநருக்கு மக்களவை துணைத் தலைவர் எம்.தம்பிதுரை, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக அரசு தலைமைச் செயலாளர் பா.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக போலீஸ் டிஜபி அசோக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்துவைத்தார். அவர்களும் ஆளுநருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதையடுத்து, விமான நிலைய நுழைவு வாயிலில் ஆளுநருக்கு காவல் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் முறைப்படி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பொறுப்பு ஆளுநர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்கத்தில் தேசியகீதம் சுருக்கமாகவும், தமிழ்த்தாய் வாழ்த் தும் இசைக்கப்பட்டது. அதை யடுத்து, தமிழக அரசு தலைமைச் செயலாளர் பா.ராமமோகன ராவ், ஆளுநரின் இசைவைப் பெற்று பதவியேற்பு உரிமை ஆணையை வாசித்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், வித்யாசாகர் ராவுக்கு பொறுப்பு ஆளுந ராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதி மொழிப் படிவங்களில் ஆளு நரும், தலைமை நீதிபதியும் கையெழுத்திட்டனர். பொறுப்பு ஆளுநருக்கு முதல்வர் ஜெய லலிதா மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

நிறைவில் தேசிய கீதம் இசைக் கப்பட்டது. மொத்த நிகழ்வும் 10 நிமிடங்களில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்களை முதல்வர் ஜெயல லிதா அறிமுகம் செய்துவைத்தார்.

ஆளுநருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.ராஜேந்திரன், எம்.வி.முரளிதரன் ஆகியோரை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநரின் மனைவி வினோதா, மகன் விவேக் சென்னமனெனி, மருமகள் சரிதா சென்னமனெனி, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x