

அதிமுகவின் 43-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை, ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி 42 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17.10.2014 வெள்ளிக்கிழமை அன்று 43-ஆவது ஆண்டு தொடங்குகிறது.
அதை முன்னிட்டு அன்று காலை 10 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, 'தொடக்க நாள் விழா சிறப்பு மலரை' வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
மேலும், தமிழகத்திலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17.10.2014 அன்று ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.