வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா?

வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா?
Updated on
2 min read

ஆர் கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதுதான் இன்றைய மிக முக்கிய செய்தி. இணையம் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைத்து இடங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டா? இல்லையா? என்பதே அந்த கேள்வி.

இது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தரப்படவில்லை என்றார்.

'ஏன் தகுதி நீக்கம் சாத்தியமில்லை?'

"வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தரப்படவில்லை. தற்போது இருக்கும் சட்ட விதிகளின்படி ஒரு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவோ அல்லது அபராத தொகை விதிக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை. தேர்தல் சீர்த்திருத்தங்கள் குறித்து பேசும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அதை நிறைவேற்றுவதற்கான முனைப்பை காட்டாததே இதற்கான காரணம்.

மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் செய்யப்படும் சிறிய சிறிய மாற்றங்களே தேர்தல் ஆணையத்திற்கு தேவையான கூடுதல் அதிகாரங்களை வழங்க முடியும். ஆனால் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதற்கான முனைப்பை காட்டுவதில்லை"

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் அமைப்புச் சட்டம் 324-ஐ போதுமானதா?

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்.கே. நகர் முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

"சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டி தேர்தல் ஆணையம் இறைவனிடம் கையேந்த வேண்டியதில்லை என்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 –ஐ பயன்படுத்தலாம்" என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் 324 ஐ பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் எப்படி அமைக்கப்படுகிறது. ஒரு நேர்மையான தேர்தலை நடத்த என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்கள் பரந்த அளவில் கூறப்பட்டுள்ளன.

ஆனால் அவற்றில் குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று சொல்லக் கூடிய சட்ட உட்பிரிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்தலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவை நிரந்தர தீர்வு:

தேர்தலை ரத்து செய்வது, அல்லது ஒத்திவைப்பது போன்றவையெல்லாம் தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்க முடியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வரக் கூடிய அதிரடி மாற்றங்களே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

அது போன்ற மாற்றங்களுக்கு நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை கூட தேவையில்லை, தனிப் பெரும்பான்மையே போதுமானது என்கிற நிலையில் அந்த பலத்தை பெற்றிருக்க கூடிய மத்திய அரசு மாற்றம் கொண்டு வருமா என்பதும் இந்த விவாதத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய கேள்வியாகும்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in